Published : 05 Mar 2021 03:41 PM
Last Updated : 05 Mar 2021 03:41 PM
பாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது என, பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் இன்று (மார்ச் 05) தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் உதகை சேரிங்கிராஸ் முதல் ஏடிசி வரை ஊர்வலம் நடைபெற்றது. ஏடிசி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், உதகை ஒய்.பி.ஏ., மண்டபத்தில் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.
இதையடுத்து, சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"தமிழகம் முழுவதும் நாங்கள் வெற்றிக்கொடி யாத்திரை செல்கிறோம். அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.
பாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது. அதிமுக ஜனநாயகம் கொண்ட கட்சி. திமுகவில் ஜனநாயகம் இல்லை. குடும்ப அரசியலை செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தடை செய்தன. பாஜக தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தவும் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தது.
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தி வாக்காளர்களை கவர கோமாளி அரசியல் செய்து வருகிறார். அவருடைய அரசியல் எடுபடாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT