Published : 05 Mar 2021 02:28 PM
Last Updated : 05 Mar 2021 02:28 PM
சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது அணிக்கு மதிமுக செல்லுமா என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் குறைந்தது 12 தொகுதிகள் வரை மதிமுக கேட்டுவருகிறது. ஆனால், 6 தொகுதிகள் வரையே திமுக தரப்பில் தர முடியும் என்று கூறப்படுவதால் சிக்கல் நீடிக்கிறது. ஒட்டுமொத்தமாக தொகுதிப் பங்கீட்டில் திமுக செயல்பாடுகள் கூட்டணிக் கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே நேற்று மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறும்போது, ‘‘முதல்கட்டப் பேச்சுவார்த்தையின் போது கூறியதையே தற்போதும் திமுக தரப்பில் தெரிவித்தோம். மதிமுக தமிழகம் முழுவதும் பரவியுள்ள கட்சியாகும். எனவே, எங்களுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம். அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையைத் திமுகதான் முடிவு செய்யும்’’என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மதிமுக- திமுக பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?
’’சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை சுமுகமான முறையிலும் இணக்கமான முறையிலும் நடந்து கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கேற்றுள்ள மதிமுக, நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
3-வது கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்ததா?
இன்னும் இல்லை.
ஏன் இந்தத் தாமதம்? திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளே வழங்குவதாகக் கூறப்படுகிறதே?
அந்த விவரங்களுக்கு உள்ளே எல்லாம் நான் போக முடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அவ்வளவுதான்.
மதிமுக சார்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன?
அந்த விவரங்களை எல்லாம் நாங்கள் வெளியே கூற முடியாது.
கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையை திமுக கொடுக்கவில்லை என்று புகார்கள் எழுவது குறித்து?
அத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. திமுகவினர் மரியாதையாகவே நடத்துகின்றனர்.
பேச்சுவார்த்தை எப்போது இறுதி வடிவம் பெறும்?
இறுதிவடிவம் பெற்ற உடனேயே உங்களுக்கு (பத்திரிகையாளர்) முதலில் சொல்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டுமே கொடுத்திருப்பது சமூக நீதிக்குப் புறம்பானது என்று கமல் தெரிவித்திருக்கிறாரே?
கமல்ஹாசன் கூறியிருப்பது அவருடைய கருத்து. ஆனால் தவறான கருத்து. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக கவுரவமாக நடத்தி இருக்கிறது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு மதிமுக செல்ல வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பே கிடையாது’’.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT