Published : 05 Mar 2021 02:07 PM
Last Updated : 05 Mar 2021 02:07 PM
தமிழகத்தில் நீட் தேர்வுக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும்போதே தமிழகத்தில் தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக காட்டுவதால் வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களில் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்க தொடரப்பட்ட வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2021-22ம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களிடம் விண்ணப்பங்களை வரவேற்று, தேசிய தேர்வு வாரியம், பிப்ரவரி 23-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
அதில், பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் எனவும், ஏப்ரல் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெறத்துவங்கிய சில மணி நேரங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக கூறி, தமிழகம், புதுவையில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள், ஆன் லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டன.
இதை எதிர்த்தும், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க கோரியும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15-ம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், மையங்களை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தில் தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக அறிவித்துள்ளதால், மாணவர்கள் வெளி மாநிலத் தேர்வு மையங்களையே தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது அவர்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்து விடும். அதனால், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார், சுகுமார குருப் அமர்வு, மத்திய - மாநில சுகாதாரத் துறை செயலாளர்களும், தேசிய தேர்வு வாரியமும், தேசிய மருத்துவ ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT