Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபத்தில் விற்கப்பட்ட ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் தணிக்கை செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் விழா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழா உலக அளவில் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து இதில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
3 நபர் குழு
அத்திவரதர் வைபவத்தின்போது விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து இந்த சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து முதல் கட்டமாக திருவேற்காடு இணை ஆணையர் லக்ஷ்மணன் தலைமையில் 3 நபர்கள் கொண்ட குழுவினர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது ஆன்-லைன் டிக்கெட் விற்பனை தொடர்பான பதிவேடுகளை தணிக்கை செய்தனர். இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் ஜெயா, கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அலுவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினரிடம் விளக்கங்களை அளித்தனர்.
இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணைகள் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT