Published : 04 Mar 2021 09:07 PM
Last Updated : 04 Mar 2021 09:07 PM
அரசுக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரூர் குளித்தலை ஆர்.டி.மலையைச் சேர்ந்த நாகவள்ளி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மகள் சவுந்தர்யா, பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 452 மதிப்பெண் பெற்று, கரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் பத்து இடங்களைப் பிடித்த பட்டியல் வகுப்பு மாணவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார்.
மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டியல் வகுப்பு மாணவர்களில் முதல் பத்து இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பில் பிரபலமான தனியார் பள்ளியில் சேர்த்து அரசு செலவில் கல்வி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில் என் மகள் செல்லம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். 2020-ல் நீட் தேர்வு எழுதி 158 மதிப்பெண் பெற்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பட்டியலில் என் மகள் பெயர் சேர்க்கப்படவில்லை.
பிளஸ் 1, பிளஸ் 2 தனியார் பள்ளியில் படித்தால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சலுகை வழங்க மறுத்து அதிகாரிகள் 10.11.2020-ல் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை ரத்து செய்து மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை என் மகளுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி வி.பார்த்தீபன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகள் அரசின் திட்டத்தின் கீழ் பிளஸ் 1, பிளஸ் 2 தனியார் பள்ளியில் படித்துள்ளார். இதனால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இருப்பினும் மனுதாரர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து வழக்கு போடவில்லை. மனுதாரரின் மனுவை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் மனுதாரருக்கு தற்போது நிவாரணம் வழங்க முடியாது. இருந்த போதிலும் அடுத்த கல்வியாண்டு முதல் மனுதாரரின் மகளைப் போன்றவர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை கிடைக்கும் வகையில் அரசு முடிவெடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. எதிர்காலத்தில் மனுதாரரின் மகளைப் போன்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கல்வியாளர்களும், அதிகாரிகளும் இடஒதுக்கீட்டு சலுகைகளை முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT