Published : 04 Mar 2021 05:33 PM
Last Updated : 04 Mar 2021 05:33 PM

மதுரையில் 4 தொகுதிகளில் போட்டியிட அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்பமனு: அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்

மதுரை 

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தான் ஏற்கெனவே தொடர்ந்து 2 முறை போட்டியிட்டு வெற்றிப்பெற்று அமைச்சரான மதுரை மேற்கு தொகுதியில் இந்த முறை போட்டியிட ஆர்வமில்லாததால் இந்தத் தொகுதியோடு சேர்த்து மேலும் 3 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.

அதனால், அந்த 3 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்து ஆர்வமாக காத்திருக்கும் அதிமுக நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

மதுரை மாநகர அதிமுகவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் செல்லூர் கே.ராஜூ.

பொதுக்கூட்டங்களில் தன்னுடைய ஆவேசப் பேச்சுக்கு நடுவே இவர் பாடும் எம்ஜிஆர் பாட்டையும், இவரது கலகலப்பான மதுரை தமிழ் பேச்சையும் ஜெயலலிதா ரசித்துக்கேட்பார்.

வைகை அணையில் நீர் ஆவியாதலைத் தடுக்க தெர்மோகோல்களை மிதக்க விட்டது, மதுரையை ‘சிட்னி’யாக்குவேன், ‘வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள் டெங்கு கொசு வரவே வராது’, என்று யோசனை சொன்னது போன்ற இவரது பேச்சுகள் நகைப்புக்குரியதாக இருந்தாலும் அவரை உள்ளூர் தாண்டியும் பிரபலப்படுத்தியது.

இவர் மதுரை மேற்கு தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார். தான் அமைச்சராவதற்கும், எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும் மதுரை மேற்கு தொகுதியை தனக்கு ராசியான தொகுதியாக செல்லூர் கே.ராஜூ கருதி வந்தார்.

ஆனால், இந்த முறை தொகுதி நிலவரம் அமைச்சருக்கு சாதகமாக இல்லை என்பதாக அவரே சற்று கலக்கமடைந்துள்ளார். அதனால், தொகுதி மாறி போட்டியிடலாம் என்று தனது மாநகர மாவட்டத்திற்குட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.

இதில், கடந்த முறை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ இந்த முறை திருப்பரங்குன்றத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தத் தொகுதியை முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம், ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்பியுமான கோபாலகிருஷ்ணன், எம்எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கேட்கின்றனர்.

தெற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ சரவணன் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார்.

மதுரை மத்தியத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இவருக்காக தேர்தல் பணிகளையும், கட்சிப்பணிகளையும் இழுத்துப்போட்டு பார்த்து வந்த ஆதரவாளர்கள் சிலர் கேட்கின்றனர்.

ஆனால், செல்லூர் கே.ராஜூவோ, இந்த மூன்று தொகுதிகளிலும் தான் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதால், இந்தத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்த அவரது ஆதரவாளர்கள், மாநகர அதிமுக முக்கிய நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.

அமைச்சராக 10 ஆண்டுகள் இருந்துவிட்டு தனது தொகுதியை சரியாக வைத்துக் கெகாள்ளாமல் தற்போது மற்ற தொகுதிகளை கேட்டு மற்ற நிர்வாகிகள் வாய்ப்பை தட்டிப்பறிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x