Published : 04 Mar 2021 05:37 PM
Last Updated : 04 Mar 2021 05:37 PM
குறைவான தொகுதி பிரச்சினை காரணமாக திமுக -காங்கிரஸ் பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடரலாமா, அல்லது வெளியேறலாமா என மாவட்ட தலைவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என திமுக அழைத்துள்ளது.
திமுக தோழமைக்கட்சிகளில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கக்கூடாது என திமுகவுக்குள் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியது.
மேல்மட்ட தலைவர்களே இதுகுறித்து கூட்டங்களில் பேசினர். இதனிடையே சட்டப்பேரவை பேச்சுவார்த்தையில் முதல் கட்சியாக காங்கிரஸை அழைத்தது திமுக. பேச்சுவார்த்தைக் குழுவே ஆரம்பிக்காத நிலையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் உம்மன் சாண்டி இதற்காக வந்திருந்தார்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் காங்கிரஸ் கேட்ட தொகுதிகளுக்கும் திமுக தரப்பில் கூறிய 16 தொகுதிகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் எழ சோர்வுடன் தலைமையிடம் பேசிவிட்டு வருகிறேன் என காங்கிரஸ் தரப்பு திரும்பியது.
இதனால் முதல்கட்ட பேச்சு வார்த்தை முடியாமல் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு போக குறைந்தது 30 தொகுதிகளாவது கேட்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் எண்ணமாக இருக்க இம்முறை கூடுதலாக 2 தொகுதிகள் சேர்த்து 18 மட்டுமே என திமுக பக்கம் சொல்லப்பட்டதாகவும் இதனால் அதிர்ந்த காங்கிரஸ் இவ்வளவு குறைவாக நிற்க வாய்ப்பில்லை நாங்கள் பேசிவிட்டு வருகிறோம் என்றுச் சொல்லி திரும்பி விட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் வெளியான தகவலாக உள்ளது.
அதன் பின்னர் காங்கிரஸ் மேலிடத்திடம் பேசிய நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்பதை காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை அழைத்து ஆலோசனை கேட்கும் முடிவுக்கு வந்து இன்று காலை மாவட்ட தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அதில் இரண்டு கேள்விகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுக கொடுக்கும் தொகுதியை வாங்கி நிற்கலாமா? அல்லது வெளியில் கூட்டணி அமைக்கலாமா? என்பதே எனச் சொல்கிறார்கள். கூட்டணியில் நின்றால் கவுரவமான தொகுதிகளைப் பெற்றால் கூட்டணியில் நீடிக்கலாம் அல்லது வெளியேறலாம். நாம் 5 ஆண்டுகள் ஒன்றுபட்டு போராடியது பிரிவதற்கல்ல, கூட்டணி உடைவதால் நமக்கு மட்டும் பாதிப்பல்ல திமுகவையும் அது பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
ராகுல், சோனியா உள்ளிட்டோர் தமிழகத்தில் திமுக கூட்டணிக்காக செய்யும் பிரச்சாரம் அவர்களுக்கு பெரிய அங்கிகாரம், அதை சில எண்ணிக்கை அடிப்படையிலான சீட்டுகளுக்காக அவர்கள் தவிர்த்தால் நாம் வெளியேறலாம் மூன்றாவது அணி அமைக்கலாம் என்பது பெரும்பாலானோர் கருத்தாக வந்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திமுக தரப்பில் இன்றைய நாளில் பெரும் மாற்றம் நிகழ்ந்ததை காண முடிந்தது. முதலில் விசிகவை அழைக்கப்பட்டது, மதிமுகவையும் அழைத்துள்ளனர். இடதுசாரி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸுக்கும் அழைப்பு விடுத்தது நல்ல முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை எப்போதும் இழுபறியாகத்தான் இருக்கும் இம்முறை காங்கிரஸ் இறங்கி வந்துள்ளது, ஆகவே 25 லிருந்து 30-க்குள் முடிய வாய்ப்புள்ளது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. நாளைய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என்பது திமுக தரப்பு பதிலாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT