Published : 04 Mar 2021 04:31 PM
Last Updated : 04 Mar 2021 04:31 PM
முடிவுக்காக பாஜகவினர் காத்துக்கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் ஆன்மிக பயணமாக திருச்செந்தூருக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த வாரத்திலேயே கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்து பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகுதான் புதுச்சேரியின் நிலை குறித்துத் தெரிய வரும்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்பாக முடிவு ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அதே நேரத்தில், புதுவையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரசுடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜக முன்னிலைப்படுத்துவது, தொகுதி ஒதுக்கீடு, எம்.பி. தேர்தலில் போட்டி என பல விஷயங்களால் என்.ஆர்.காங்கிரஸ் தரப்புடன் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
கூட்டணியில் இழுபறி நீடித்து வந்ததால் கடந்த 1-ம் தேதி ரங்கசாமி ஆன்மிக சுற்றுப்பயணமாக பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்றார். பின்னர், திட்டமிட்டபடி திருச்செந்தூர் செல்லாமல் புதுவைக்குத் திரும்பினார். அதைத்தொடர்ந்து, பாஜக தரப்பு அவருடன் பேசியது. ரங்கசாமியும் தனது கட்சியினரின் கருத்துகளை கேட்டறிந்துவிட்டு முடிவு தெரிவிக்காமல் உள்ளார்.
ரங்கசாமி திருச்செந்தூர் பயணம்
இதனால், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது பாஜக கூட்டணியில் நீடிக்குமா என்ற இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், ரங்கசாமி இன்று (மார்ச் 4) திருச்செந்தூருக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் சென்றுள்ளனர். திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு புதுவை திரும்பிய பிறகு அவர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்றும் அவரது கட்சியினரும் பாஜகவினரும் நம்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT