Published : 04 Mar 2021 03:26 PM
Last Updated : 04 Mar 2021 03:26 PM
வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அதிமுகவை எதிர்க்கக்கூடிய சக்தி எந்த கட்சிக்கும் இல்லை என, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, பிப். 27 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று (மார்ச் 4) அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவில் சுமார் 8,200 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், தங்களுக்காக விருப்ப மனு அளித்தவர்களை அதிமுக தலைமைக்கழகம் நேர்காணலுக்கு அழைத்திருந்தது. காலை 9 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 9 பேர் கொண்ட குழுவின் முன்னிலையில், நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இந்த நேர்காணலில், கட்சிப்பணிகள், தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என, ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனைகளை வழங்கினர்.
நேர்காணலின் தொடக்கத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி, மக்களின் மதிப்பை நாம் பெற்றிருக்கிறோம். அதிமுக ஆட்சியை சிறந்த ஆட்சியாக மக்கள் கருதுகின்றனர். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால்... நிச்சயமாக வெற்றி பெற்றுவிடுவோம். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், அதிமுகவை எதிர்க்கக்கூடிய சக்தி எந்த கட்சிக்கும் இல்லை" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT