Published : 04 Mar 2021 02:55 PM
Last Updated : 04 Mar 2021 02:55 PM

கட்சிக்குள் எதிர்ப்பு; குறைவான தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஸ்டாலின் - திருமாவளவன்

சென்னை

கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், குறைவான தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன் என, விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இழுபறிக்குப் பின்னர், திமுக கூட்டணியில் விசிக 6 தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (மார்ச் 4) அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.

பின்னர், திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"திமுக தலைமையிலான கூட்டணியில் இந்த தேர்தல் களத்தை விசிக சந்திக்கவிருக்கிறது. தமிழகத்தை சூழ்ந்திருக்கும், சனாதன பேராபத்திலிருந்து தமிழகத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய ஒரு யுத்தக் களமாக இந்த தேர்தல் களம் அமையவிருக்கிறது. தமிழகத்தையும் புதுச்சேரியையும் குறிவைத்து பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகள், பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவர்களால் இங்கே காலூன்ற முடியாத நிலை, வேரூன்ற முடியாத நிலை, பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கோலோச்சிய மாநிலங்களில், எந்த காலத்திலும் பாஜக வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த வடகிழக்கு மாநிலங்களில், பல்வேறு சூது, சூழ்ச்சிகளை செய்து, சதி திட்டங்களை அரங்கேற்றி ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய பாஜகவால் தமிழ்நாட்டில் மட்டும் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அவர்களால், கர்நாடகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்த அவர்களால், மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்த அவர்களால், தமிழ்நாட்டில் அவர்களின் கனவு பலிக்கவில்லை. அவர்களின் முயற்சி எதுவும் வெற்றி பெறவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில், பெரியார் மண்ணாக விளங்கும் தமிழகத்தில் காலூன்றி, திராவிட கட்சிகளை இல்லாது ஒழித்துவிட வேண்டும், சாதி, மத வெறி சக்திகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றெல்லாம் திட்டம்போட்டு செயல்பட்டு வருகிறது பாஜக. அதற்கான அனைத்து பகீரத முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக, ஆட்சியைக் கவிழ்த்தது. அருவருப்பான அரசியலை அரங்கேற்றியது. அதேபோல, தமிழகத்திலும் தில்லுமுல்லு வேலைகளை செய்ய வேண்டும், திராவிட கட்சிகளை அகற்றி அதன்மூலம் சமூகநீதி அரசியலையே அழித்தொழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், 2019-ல் இருந்து திமுக கூட்டணியில் விசிக பயணித்து வருகிறது. 2016-ல் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விசிக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் 2017-ல் இருந்தே திமுகவுடன் பயணப்பட்டு வருகிறோம். சனாதன சக்திகள் இங்கு தலையெடுத்துவிடக்கூடாது, சாதி வெறியர்களும், மதவெறியர்களும் இங்கே வலிமை பெற்றுவிடக் கூடாது அம்பேத்கர், பெரியார் நிலைநிறுத்திய சமூகநீதிக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் பயணித்து வந்திருக்கிறோம்.

திமுக விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 6 இடங்களில் போட்டியிடுவதென முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் உயர்நிலைக் குழுவிலும் தலைமை நிர்வாக குழுவிலும் இந்த எண்ணிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில், உடன்பாடு செய்ய வேண்டாம் என தெரிவித்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில்கொண்டு, எதிர்கால அரசியலையும் கருத்தில்கொண்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதுதான் முதன்மையானது, மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் எந்த காலத்திலும் சிதறிவிடக்கூடாது, அப்படி சிதறுவதற்கு எந்த சூழ்நிலையிலும் விசிக காரணமாகிவிடக்கூடாது, இடம்தந்துவிடக்கூடாது என்கிற அடிப்படையில், சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் விரட்டியடிக்க வேண்டும் என்கிற ஒரு கொள்கை உறுதிப்பாட்டின் அடிப்படையில் விசிக தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறோம்.

மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறினால் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு துணைபோவதாக அமைந்துவிடும் என்ற அச்சம் விசிகவுக்கு மேலோங்கி இருக்கிறது. அவர்கள் அதிமுகவுடன் பழகிக்கொண்டே, அதிமுகவை இல்லாது அழித்தொழித்து விட வேண்டும் என்கிற மறைமுக செயல்திட்டத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை அவ்வப்போது அதிமுக தலைமைக்கு நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

கூட்டணி கட்சிகளின் வலிமையை பலவீனப்படுத்துவதில் பாஜக கைதேர்ந்தது. என்.ஆர்.காங்கிரஸுடன் நட்பு பாராட்டிக்கொண்டே அக்கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்களை தமது கட்சியில் சேர்க்கிறார்கள். ஹரியாணாவில் தோழமைக் கட்சிகளை சேர்ந்த அனைவரையும், அக்கட்சியை சேர்ந்த தலைவரை தவிர அனைவரையும் பாஜகவில் இணைத்துக்கொண்டார்கள் அல்லது விலைக்கு வாங்கிக்கொண்டார்கள்.

எனவே, அவர்கள் நட்புக்கும் நேர்மையாக நடந்துகொண்டதாக அரசியல் வரலாறு இல்லை. அப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் வேரூன்றினால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறி இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு திமுக தலைமையிலான கூட்டணியை வலிமைப்படுத்துவதும், தேர்தல் களத்தை வெற்றிகரமாக சந்திப்பதும் காலத்தின் தேவை என்பதை விசிக உணர்கிறது. அதன்படி உடன்பட்டு 6 தொகுதிகளில் நிற்கிறோம். 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம்.

தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியும் கட்டிக்காப்பாற்றிய தமிழக மக்களின் நலன்களை சமூக நீதியை சனாதன சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதை இந்த தேர்தலில் முன்னிறுத்தவிருக்கிறோம். சனாதன சக்திகள் இந்திய அளவில் வலிமை பெறுவது தேசத்துக்கே ஆபத்து. எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவுகளை எடுக்கிறார்கள். வெகுமக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றுகின்றனர். சனாதன சக்திகளை விரட்டியடிப்பதற்காக பிரச்சாரம் செய்வோம்.

திமுகவில் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி உடைந்துவிடக்கூடாது. வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பது விசிகவின் கவலை. அவர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பார்கள்'.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x