Published : 04 Mar 2021 12:48 PM
Last Updated : 04 Mar 2021 12:48 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கவில்லை என்றும் சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக காரணமாக இருந்திருக்கலாம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், கடந்த 2 நாள்களாக நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று மாலை தொகுதிப் பங்கீடு பேச்சு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் திமுக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதற்கிடையே திமுக கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாகத் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
சசிகலாவின் அறிக்கை மிகுந்த நுட்பமாகவும் கவனமாகவும் உள்ளது. அதிலுள்ள கருத்துகள் அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவரது உடல் நலம், மன நலம் கருதி அமைதியாக இருக்கலாம் என்று இந்த முடிவை எடுத்திருக்கலாம். அல்லது பாஜக சசிகலாவுக்கு அழுத்தம், நெருக்கடி கொடுத்து இந்த முடிவை எடுக்க நேர்ந்திருக்கலாம்.
அதிமுகவையும் அமமுகவையும் இணைக்க தான் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கருதி தொலைநோக்குப் பார்வையோடும் சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கலாம். இது அதிமுக- அமமுக தொண்டர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
தினகரன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை. பாஜக அதிமுக- அமமுக கூட்டணியை ஏற்படுத்த முயல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சசிகலாவின் முடிவு அரசியல் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டிருப்பதாக நம்ப வேண்டியிருக்கிறது.
இந்தத் தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்குமா?
அதில் என்ன சந்தேகம்?
கூட்டணிப் பேச்சுவார்த்தையை விசிக நேற்று புறக்கணித்திருக்கிறதே?
புறக்கணிக்கவில்லை, பணிச் சுமைகள் அதிகம் இருந்தன. நேரம் பொருந்தி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.
3-வது அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து பயணிக்குமா?
இது பொருத்தமற்ற கேள்வி.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT