Published : 04 Mar 2021 12:05 PM
Last Updated : 04 Mar 2021 12:05 PM
பாஜக திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் குஷ்பு தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கே சினிமா செட் பாணியில் பணிமனை அமைத்து அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது உறுதியகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக பணிமனை அமைப்பது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் வழக்கம். பழைய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பணிமனை அமைப்பார்கள் . தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் அவரது அரசியல் கட்சி ஆட்கள் அமர்ந்து பிரச்சார பணிகளை மேற்கொள்ள, மற்ற அலுவல்களை செய்ய, செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு பணியாற்றுவார்கள். அதை தேர்தல் பணிமனை என அழைப்பார்கள்.
கட்சிகளின் பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்கள், பெரிய கட்டிடங்கள், குடோன்கள் என கட்சிகளின் அந்தஸ்த்துக்கு தகுந்தப்படி பணிமனை வரும். பணிமனை முன் பந்தல் அமைத்து, மேஜை நாற்காலிகள் போட்டு பேப்பர்கள் போட்டு தொண்டர்கள் கூட்டம் என பணிமனை களைக்கட்டும்.
இவையெல்லாம் தேர்தல் ஆரம்பித்த பின்னர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின் மெதுவாக தொடங்கும். ஆனால் தொகுதி பொறுப்பாளர் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் கட்சிக்காக பணிமனை தொடங்கியுள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எப்போதும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதி.
திமுக தலைவர் கருணாநிதியும் பின்னர் ஜெ.அன்பழகனும் போட்டியிட்ட தொகுதி. தற்போது திமுகவிலிருந்து உதயநிதி போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். அவர் போட்டியிடவே வாய்ப்பு என்பதால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்தை தொகுதி பெறுகிறது. அதிமுக பெரும்பாலும் கூட்டணிக்கு தள்ளிவிடும் இந்த தொகுதியின் பாஜக பொறுப்பாளராக குஷ்பு நியமிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் எனவும் ஒருவேளை குஷ்பு கூட போட்டியிடலாம் என்கிற நிலையில் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அருகே, 9 கிரவுண்ட் இடத்தில் நடிகை குஷ்பு தனது தற்காலிக தேர்தல் பணிமனையை அமைத்து உள்ளார். நடிகை குஷ்பு சினிமா துறையில் இருந்து வந்ததால், தனது தேர்தல் பணிமனையையும் சினிமா பாணியில் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.
சினிமா என்றாலே செட்டிங் அதிகமாக இருக்கும். அதன்படி, நடிகை குஷ்பு தனது தேர்தல் பணிமனையை 4 கன்டெய்னர்களை கொண்டு, கட்சியினரை அசரவைக்கும் வகையில் கட்டியமைத்துள்ளார். தேர்தல் பணிமனையின் முகப்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாஜக தேர்தல் அலுவலகம் என்ற பெயருடன் பெரிய அளவில் தாமரைப்பட பேனரும் உள்ளது.
வாசலிலிருந்து பிரம்மாண்ட பந்தல் அமைத்து ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கை வசதிகளும், குடிநீர், மின்விசிறி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. உள்ளே வந்தவுடன் ரிஷப்ஷன் போல் செட்டப்புடன் 4 கண்டெய்னர்களை ஒன்றாக்கி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அனைத்து வசதிகளுடன் ஏசி கூட்ட அரங்கு, அட்டாச் பாத்ரூம் என பெரிய கட்டிடத்தை வாடகைக்கு பிடித்ததுபோன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கன்டெய்னரில் குஷ்புவின் அலுவலகம் செயல்படுகிறது. மற்ற 3 கன்டெய்னர்களில் உள்ள அறைகளிலும் தொகுதி நிர்வாகிகளுக்கு தனித்தனி அறை உள்ளது. தனியாக தொலைபேசி, இணையதள வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
குஷ்பு தினமும் காலையில், இங்கு வந்து, கட்சி தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். தேர்தல் பணிகள் தொடர்பாகவும் விவாதித்து வருகிறார். பொதுவாக வேட்பாளர் மட்டுமே தொகுதியில் பணிமனை அமைப்பது வாடிக்கை. ஆனால் தொகுதியில் பொறுப்பாளராக இருப்பவர் கட்சிக்காக பணிமனை அமைத்தது தொண்டர்களால் பாராட்டப்படுகிறது. அதே நேரம் குஷ்பு பணிமனை அமைத்ததால் இங்கு போட்டியிடுவது உறுதியாகிறதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...