Published : 05 Nov 2015 04:09 PM
Last Updated : 05 Nov 2015 04:09 PM
தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தில் ஸ்டாலினே முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார். வேலூர் மாவட் டத்தில் ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னாள் அமைச்சர் துரைமுருகனை முன்னிலைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஸ்டாலினின் பயணத்தை திட்டமிடும் குழுவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினார். கன்னியா குமரியில் தொடங்கிய தன் பயணத்தை 2 கட்டமாக முடித்தார். 3-ம் கட்ட பயணத்தை சேலத்தில் தொடங்கிய ஸ்டாலின் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் தன் சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதி களை உள்ளடக்கிய மாவட்டம் வேலூர் மாவட்டம் என்பதால், வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். இதில், திட்டமிட்டப்படி சில முன்னேற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்யாததாலும், பேனர் விஷயங்களிலும் ஸ்டாலின் டென்ஷன் ஆனதாகக் கூறப்படு கிறது.
வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் தன் சுற்றுப்பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், அங்கு பஜார் பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தார். பின்னர், ஜோலார்பேட்டையில் மகளிர் குழுக்களைச் சந்தித்து விட்டு, அங்கிருந்து வாணியம்பாடியில் விவசாயிகள், ஜமாத் தலைவர்கள், தோல் தொழிற்சாலை அதிபர் களை சந்தித்து பேசினார். ஸ்டாலினை வரவேற்க திமுக மேற்கு மாவட்டம் சார்பில் குறைந்த அளவிலேயே பேனர்கள் வைக்கப்பட்டன. இதிலும் சிலவற்றை மர்ம நபர்கள் கிழித்துவிட்டனர். இதனால் ஸ்டாலினின் பயணத்தை திட்டமிடும் குழு அதிர்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சிகளிலும் ஏகப்பட்ட குளறுபடி இருந்ததால் ஒரு கட்டத்தில் ஸ்டாலினே முகம் சுழித்ததாக திமுவின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
துரைமுருகனுக்கு முக்கியத்துவம்
வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் காட்பாடி பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்களில் துரைமுருகன் படம் இடம் பெற்றிருந்தது. இதனால் டென்ஷனான ‘ஸ்டாலின் பயணக் குழுவினர்’ பயணத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் சாலை வழியாக சென்று காட்பாடி உழவர் சந்தையில் காய்கறி வியாபாரிகளை சந்திப்பது, ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சந்திப்பு என பல்வேறு முன்னேற்பாடுகளை காட்பாடி திமுகவினர் செய்திருந்தனர்.
ஆனால், திடீரென திரும்பி மீண்டும் சித்தூர் பேருந்து நிலையத்துக்கு வந்தார். இதைக் கண்டு திகைத்த காட்பாடி திமுகவினர் ஸ்டாலினை நெருங்கி கேட்டபோது,நேரமில்லை என கூறிவிட்டு, மேல் விஷாரம் கல்லூரி நோக்கி புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து வந்த துரைமுருகன், கல்லூரி வாசல் வரை வந்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசிய துரைமுருகன் டென்ஷனாகவே காணப்பட்டார். கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் முடித்துக் கொண்ட ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு ஆற்காட்டில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய துரைமுருகன், அதன்பின்னர் உள்ளே வரவில்லை. பின்னர், திடீரென காரில் தன் ஆதரவாளர்களுடன் மீண்டும் காட்பாடிக்குத் திரும்பினார் துரைமுருகன்.
வாலாஜா, அரக்கோணம் போன்ற பகுதிகளில் ஸ்டாலினின் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பாதியில் திரும்பி வந்தது வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்தி கோஷ்டியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காட்பாடியில் வைக்கப்பட்ட பேனரில் ஸ்டாலின் படம் இல்லாதது, கழிஞ்சூரில் கட்சியினர் விரட்டியடித்த சம்பவங்களால் ஸ்டாலின் டென்ஷனாகி, நடைபயணத்தை காட்பாடியில் பாதியில் முடித்ததாகவும், அதற்கு பதிலடி கொடுக்கவே, துரைமுருகன் ஆற்காட்டில் தன் பயணத்தை பாதியில் முடித்து திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘துரைமுருகன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவர் பாதியில் திரும்பினார். வேலூர் மாவட்ட பயணம் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT