Published : 04 Mar 2021 08:53 AM
Last Updated : 04 Mar 2021 08:53 AM

அதிமுகவை உரசிப்பார்க்க வேண்டாம்: எல்.கே.சுதீஷுக்கு வைகைச் செல்வன் கண்டனம்

கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுவதாகப் பேசியுள்ள தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு அதிமுகவின் வைகைச் செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று (மார்ச் 3) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், "கடந்த 2011 தேர்தலில் நாம் அதிமுக கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது. இன்று நாம் கூட்டணிக்காக கெஞ்சவில்லை. அவர்கள் தான் நம்மிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். வேண்டும் என்றால் என் தொலைபேசியில் எத்தனை அழைப்புகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்" எனப் பேசியிருந்தார்.

தேமுதிக அதிமுக தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், எல்.கே.சுதீஷ் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எல்.கே.சுதீஷ் பேச்சுக்கு, அதிமுகவின் வைகைச் செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அதிமுக யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, சுதீஷ் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அப்படிப் பேசியிருக்கலாம். இருப்பினும் அதிமுகவை உரசிப் பார்க்கும் செயலில் தேமுதிக இடம்பெற வேண்டாம் என்றார்.

சுதீஷ் பேச்சு முழு விவரம்;

கடந்த 2011 தேர்தலில் நாம் அதிமுக கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது. அப்போது,நாமும் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக வந்தோம். இன்று நாம் கூட்டணிக்காக கெஞ்சவில்லை. அவர்கள் தான் நம்மிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். வேண்டும் என்றால் என் தொலைபேசியில் எத்தனை அழைப்புகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

நான் போகும்போது எந்தெந்த கட்சியில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று மாவட்டச் செயலாளரிடம் காட்டிவிட்டு செல்கிறேன்.எல்லா கட்சியில் இருந்தும் பேசுகிறார்கள்.விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் நாங்கள் வரத் தயார் என்கின்றனர். நமது கட்சியின் அங்கீகாரம், முரசு சின்னம் வேண்டும் என்றால் 8 எம்எல்ஏக்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காகத்தான் கூட்டணியில் இருக்கிறோம். பேசிப் பார்ப்போம்.

10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். அது நல்ல விஷயம்தான். அப்படியெனில் மற்ற சாதியினரின் ஓட்டுகள் தேவையில்லையா? தேமுதிக கூட்டணியுடன் ஆட்சி அமையும்போது அந்த இட ஒதுக்கீட்டை நாமே வாங்கிக் கொடுப்போம். இப்போது கொடுத்திருப்பது 6 மாதம்தான். நமது கூட்டணியை மூன்று நாளில் விஜயகாந்த் முடிவு செய்வார்.

எந்தக் கூட்டணியாக இருந்தாலும் நாம் ஜாக்கிரதையாக வேலை செய்ய வேண்டும். நான்கு மாவட்டத்தில் எந்த தொகுதி கிடைக்கிறதோ அந்த இடத்தில் அனைத்து தேமுதிகவினரும் வேலை செய்ய வேண்டும். இன்னும் 3 மாதங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான நகராட்சி, பேரூராட்சிகளில் இடம் வாங்கித் தரப்படும்.

இந்த தேர்தலில் திமுகவும், அதிமுகவும் சமமாக இருக்கிறார்கள். தேமுதிக சேரும் இடம் அமோகமாக வெற்றி பெறும். மாநிலங்களவை சீட்டுக்காக நான் ஆசைப்பட்டதே இல்லை. நான் நினைத்திருந்தால் 2009, 2014-ல் வாங்கி இருப்பேன். தேர்தலில் வெற்றிபெற்று செல்ல வேண்டும் என்று விஜயகாந்தும் நானும் நினைக்கிறோம்.

2019-ல் நமக்கு கொடுத்த மாநிலங்களவை சீட்டைத்தான் விஜயகாந்தின் நல்ல நண்பர் ஜி.கே.வாசனுக்கு கொடுத்தார்கள்’’ என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x