Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM
மணப்பாறை, ஸ்ரீரங்கம் தொகுதிகளில் கடந்த 2001 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அதிமுகவை இம்முறை வீழ்த்த திமுகவினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். அதேபோல தொடர் வெற்றியைத் தக்க வைக்க அதிமுகவினரும் முழுவீச்சில் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றியும், தோல்வியும் மாறிமாறி கிடைக்கக்கூடிய நிலையில், மணப்பாறை, ரங்கம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெற முடியாத நிலை நீடிக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் தொடர் தோல்வி
நகர்ப் பகுதியும், கிராமப் பகுதியும் கலந்து காணப்படும் ரங்கம் தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த தி.ப.மாயவன் வெற்றி பெற்றார். அதன்பின் இத்தொகுதி அதிமுக வசம் சென்றது. 2001-ல் கே.கே.பாலசுப்பிரமணியன்(அதிமுக), 2006-ல் பரஞ்சோதி(அதிமுக) வெற்றி பெற்றனர்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டதால் 2015-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.வளர்மதி வெற்றி பெற்றார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் எஸ்.வளர்மதியே வெற்றி பெற்றார். இதனால் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு இத்தொகுதியில் திமுகவால் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
கோட்டையை இழந்த திமுக
இதேபோல கிராமப்புறங்கள் நிறைந்த, வானம் பார்த்த பூமியாக விளங்கும் மணப்பாறை தொகுதி(சீரமைப்புக்கு முன் மருங்காபுரி தொகுதி) கடந்த காலத்தில் திமுகவின் கோட்டையாகவே விளங்கியது. இக்கட்சியைச் சேர்ந்த என்.கிட்டப்பா 1971, 1977, 1980 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
அதன்பின் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட சோலைராஜா வென்றார். அதன்பின், அதிமுகவின் வெற்றிக்கொடியே பறந்தது. 1989, 1991-ம் தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பேராசிரியர் கே.பொன்னுசாமி வெற்றி பெற்றார். அதிமுகவின் இந்த தொடர் வெற்றிக்கு 1996-ல் நடைபெற்ற தேர்தல் முற்றுப்புள்ளி வைத்தது. அப்போது இங்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட பி.எம்.செங்குட்டுவன் வெற்றி பெற்றார். ஆனால் அதன்பின், 2001-ல் வி.ஏ செல்லையா, 2006-ல் சி.சின்னச்சாமி, 2011, 2016-ல் ஆர்.சந்திரசேகர் என தொடர்ச்சியாக அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
கைப்பற்ற திமுக தீவிரம்
கடந்த 2001 முதல் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இந்த 2 தொகுதிகளிலும் இந்த முறை திமுக வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதன்காரணமாகவே, அண்மையில் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்த 2 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி தீவிர பிரச்சாரம் செய்தார். மேலும், இந்த தொகுதிகளை இம்முறை கூட்டணி கட்சிகளுக்குக் கொடுக்காமல் திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அன்பு கொண்ட மக்கள் அதிகமாக வாழும் தொகுதி ரங்கம். எனவே இத்தொகுதியில் எப்போதும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அதேபோல மணப்பாறை தொகுதியும் அதிமுகவுக்கே சாதகமான தொகுதி. இங்கு வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அதிமுகவினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த 2 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றியைத் தக்க வைப்பது உறுதி’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT