Published : 03 Mar 2021 10:31 PM
Last Updated : 03 Mar 2021 10:31 PM
அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ள நிலையில் அதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் பொது வெளியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
சசிகலா மீதான வழக்குகள் எல்லாம் மத்திய அரசின் அமைப்புகளால் தொடரப்பட்டது என்பதால், சசிகலா அரசியலில் தனித்து இயங்கினால் அது அதிமுக கூட்டணிக்கு பாதகமாகிவிடுமோ என்று அஞ்சுவதாலும், அதனால் மத்திய அரசின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்குமோ எனக் கலங்குவதாலும் அவர் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக ஒருதரப்பு தெரிவிக்கின்றது.
இன்னும் சிலர், அவர் உடல்நலம் சார்ந்து எடுக்கப்பட்ட இயல்பான முடிவு என்று சொல்கின்றனர்.
மற்றுமொரு தரப்பு அரசியல் விமர்சகர்கள், தேர்தல் நெருங்குவதால் சசிகலா இப்படி ஒரு தற்காலிக முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
ஆனால், தனது விலகல் குறித்து ஆழமான விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, திமுக எனும் பொது எதிரியை ஒழிக்க உண்மைத் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சசிகலா விலகல் குறித்து டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், "அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருப்பது எனக்கு வேதனையளிக்கிறது.
தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலேயே அவர் அப்படி சொல்லியிருக்கிறார். அதை அவரே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் நம்புவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
தேர்தல் களத்தில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். அதனால், அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்குவதால் இனி பின்னடைவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சுயமான முடிவு இது. எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவரின் மனசாட்சியாக நான் பேசவும் முடியாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT