Published : 03 Mar 2021 09:46 PM
Last Updated : 03 Mar 2021 09:46 PM
அரசியலில் இருந்தே விலகுவதாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரனின் உறவினருமான வி.கே.சசிகலா அறிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் சசிகலாவின் இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நான் என்றும் வணங்கும் என் அக்கா, புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சித் தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT