Published : 03 Mar 2021 08:30 PM
Last Updated : 03 Mar 2021 08:30 PM
மதுரை மாநகராட்சி கருவூலத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மாயமான வழக்கு பொதுநல வழக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் 2014-ல் மனு தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரே பழமையான குன்னத்தூர் சத்திரம் இருந்தது. அதில் மதுரை மாநகராட்சியின் வரி வசூல் அலுவலகம் இயங்கி வந்தது. அந்த சத்திரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் இருந்தது. தினமும் அங்கு பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. நாளடைவில் சத்திரம் சிதிலமடைந்ததால் இடிக்கப்பட்டது.
இதனால் சத்திரத்திலிருந்து மரகத லிங்கம் மற்றும் சந்தன பேழை, செப்பு பட்டயம் ஆகியன மதுரை மாநகராட்சி அலுவலக கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டது. அந்த மரகத லிங்கம் மாயமாகி விட்டது. அதை கண்டுபிடித்து மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என தல்லாகுளம் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மரகத லிங்கத்தை கண்டுபிடித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மரகத லிங்கம் மாயமானது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார்.
மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மரகத லிங்கம் மாயமானது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் ஏ.கண்ணன், இந்த வழக்கை பொதுநல வழக்காக மாற்றி இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றார். இதையேற்று, வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT