Published : 03 Mar 2021 06:54 PM
Last Updated : 03 Mar 2021 06:54 PM
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, தந்தையை முதல்வராக்க பிரச்சாரத்தில் முழுவீச்சில் இறங்க உள்ளார் என்று நேற்று செய்தி வெளியானது. இதுகுறித்து உதயநிதி தரப்பில் கேட்டபோது உரிய விளக்கம் அளித்துள்ளனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக அமைத்த முதல் பிரச்சார இயக்கத்தை முதல் நாளில் திருவாரூரில் தொடங்கிய உதயநிதி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கிய தலைவராக வளர்ந்துவரும் உதயநிதி சினிமா பிரபலம், கட்சித் தலைவர் ஸ்டாலின் மகன் என்பதால் ஊடக வெளிச்சம் அதிகம் விழும் நிலையில் அவரது ஒவ்வொரு செயலும் உற்று நோக்கப்படுகிறது. பிரச்சாரம் செய்வதில் தாத்தா பாணியும் இல்லாமல், தந்தை பாணியும் இல்லாமல் உரையாடல் முறையில் உதயநிதி செய்யும் பிரச்சாரம் தனி வரவேற்பை பெற்று வருகிறது.
உதயநிதி மக்களவை தேர்தலில் சிறப்பாக பிரச்சாரம் செய்த நிலையில் திமுக பெருவெற்றி பெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தாத்தா போட்டியிட்ட திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடவேண்டும் என திமுகவினர் வலியுறுத்த உதயநிதி சார்பில் திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று சில சமூக ஊடகங்களில், வலைதளங்களில் உதயநிதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, தந்தை முதல்வராக, திமுக கூட்டணி வெற்றிப்பெற உதவும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றும் செய்தி வெளியிட்டதால் திமுக தொண்டர்களிடையே குழப்பமான மனநிலை உருவானது.
யாரிடம் இதை உறுதிப்படுத்துவது என்பது புரியாமல் விழித்தனர். திமுக இளைஞரணி நிர்வாகிகளும் குழப்பமான மன நிலையில் பதில் சொல்ல இயலாமல் இருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து இன்று காலை தெளிவான பதில் உதயநிதி தரப்பினரிடமிருந்து கிடைத்தது.
உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை, பிரச்சாரம் மட்டுமே செய்யப்போகிறார் என்ற செய்தி உண்மையில்லை, யாரோ திட்டமிட்டு வதந்தியை கிளப்பியுள்ளார்கள், அது பரவியுள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு தாக்கல் செய்திருப்பது உண்மை தான். ஆனால், அவருக்கு அந்த தொகுதியை ஒதுக்குவதாக, இல்லையா என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
அதற்குள் அவர் போட்டியிடவில்லை, பிரச்சாரம் மட்டுமே செய்யவுள்ளார் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பியதால் தொண்டர்கள் குழப்பமடைந்து விட்டனர். திமுகவுக்கு செல்வாக்கான தொகுதி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ஆகையால், கட்சித் தலைமை அனுமதி அளித்தால் கண்டிப்பாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி.
இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பு வரும்போது அனைத்தும் தெளிவாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment