Published : 03 Mar 2021 05:23 PM
Last Updated : 03 Mar 2021 05:23 PM
காங்கிரஸ்- திமுக பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. தொடர்ச்சியாக பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடந்தும் ஒரு முடிவுக்கு வர இரு தரப்பும் பிடிவாதம் பிடிக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற நிலை உருவாகியுள்ளது.
2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் முறிந்த காங்கிரஸ் திமுக கூட்டணி காரணமாக அதிமுக பலனடைந்தது. அதன் மூலம் திமுக காங்கிரஸ் கூட்டணியின் முக்கியத்துவத்தை இரண்டுக்கட்சிகளும் புரிந்துக்கொண்டு மீண்டு இணைய முடிவெடுத்தன. தமிழகத்தில் 2016- சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குள் வருவதற்கான பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் 60 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கேட்டது.
இடதுசாரிகள், மதிமுக, பாமக கூட்டணியில் இல்லாத நிலையில் பெரிய கட்சியான காங்கிரஸை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி முனைப்பாக இருந்தார். திமுக தரப்பில் 30 என ஆரம்பித்து பேச்சு வார்த்தை நகர்ந்துக் கொண்டிருந்தது. தேமுதிகவையும் காங்கிரஸையும் திமுக அணிக்குள் கொண்டு வந்தால் தனித்து நிற்கும் அதிமுகவை எளிதாக வீழ்த்தலாம் என திமுக முடிவெடுத்தது. இது காங்கிரஸுக்கும் தெரியும்.
இதனால் இருபுறமும் இழுபறி நீடித்த நிலையில் 35 தொகுதிகள் வரை பேசப்பட்டது. இழுபறி நீடித்த நிலையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். திமுக தாமாக கூட்டணி உறுதி என முடிவாகும் நிலையில் அவசர அவசரமாக 41 தொகுதிகள் என முடிவெடுத்து திமுக கூட்டணியில் இணைவதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே வென்றது.
பெருவெற்றி கிடைக்கும் என நம்பிய திமுகவினர் காங்கிரஸ் குறைவான தொகுதியில் வென்றதால் கடும் அதிருப்தி அடைந்தனர். 41-க்கு 30 தொகுதி வென்றிருந்தால் கூட கூட்டணி ஆட்சி அமைத்திருக்கலாமே என்ற பேச்சு கடுமையாக எழுந்தது. 89 தொகுதிகளை வென்ற திமுக எதிர்க்கட்சியில் அமரும் நிலை ஏற்பட்டது.
அதுமுதல் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் விட்டுக்கொடுக்காவிட்டால் நாம் வென்றிருக்கலாம் எனவும், கூட்டணி கட்சியினர் 7 பேர் உட்பட 234 இடங்களிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்றதுபோல் நாமும் சின்னம் இல்லாத கூட்டணிக்கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் நிற்கவைப்போம் என முடிவெடுக்க வேண்டும் என பேச்சு அடிபட்டது.
அதன் விளைவே 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் விசிகவையும், மதிமுகவையும் மற்ற சிறிய கட்சிகளையும் உதய சூரியன் சின்னத்தில் நிற்க வற்புறுத்தினர்.
ஆனாலும் கவுரவம் கருதி மதிமுக ஒரு இடத்தில் மட்டும் உதய சூரியன் சின்னத்தில் நிற்க ஒரு இடம் வேண்டாம் என மாநிலங்களவை ஒதுக்கப்பட்டது. அதேப்போன்று விசிகவும் ரவிக்குமார் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க திருமாவளவன் தனிச் சின்னத்தில் நின்று வென்றார். இதனால் இந்த ஃபார்முலா சரியானது என்கிற முடிவுக்கு திமுக தலைமை வந்தது.
இந்த சூழ்நிலையில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தொடர்ந்து காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகளே காங்கிரஸுக்கு வாக்குகள் இல்லை என்று பேச ஆரம்பித்தனர். மறுபுறம் ஐபேக் நடத்திய ஆய்வில் திமுக 180 தொகுதிகள் கட்டாயம் நிற்க வேண்டும் எனக்கூறியதாக தகவல் வெளியானது.
மக்களவையில் காங்கிரஸ் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 8 தொகுதிகளில் வென்றது. அந்த அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 6 என வைத்தாலும் 54 தொகுதிகள் என்கிற அடிப்படையில் அணுகலாம் என முடிவெடுத்துள்ளனர். ஆனால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக எண்ணும் திமுக தலைமை அனைத்து கூட்டணிக்கட்சிகளுக்குமே ஒரு மக்களவை தொகுதிக்கு 2 சீட்டுகள் என்கிற அடிப்படையில் யோசிக்க காங்கிரஸுக்கு 18 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்கிற நிலையில் திமுக நிற்க பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் காங்கிரஸ் தரப்பில் 25 முதல் 30 தொகுதிகள் வரை இறங்கி வர தயாராக உள்ளதாகவும், ஆனால் திமுக பக்கம் 18 தொகுதிக்கு மேல் உயர் வாய்ப்பில்லை என கறாராக கூறியதாகவும் தெரிகிறது. இதனால் பேச்சு வார்த்தை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கவுரவமான தொகுதியை கேட்டுப்பெறுங்கள் என காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்ட நிலையில் 41 தொகுதிகள் நின்ற காங்கிரஸ் 25 தொகுதிகளையாவது கேட்டுப்பெற்றால் ஓரளவு மன நிறைவு இருக்கும் என நினைக்கிறார்கள்.
ஆனால் திமுக இறங்கி வராத நிலையில் கூட்டணியில் நீடிக்கலாமா? விலகலாமா என்கிற மனோநிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ். நாளை மாவட்ட தலைவர்களை தினேஷ் குண்டு ராவ் தனித்தனியாக சந்தித்து கருத்தைக் கேட்கிறார்.
இதற்காக மாவட்ட தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை ஆலோசனைக்கு பின் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து காங்கிரஸ் முக்கிய முடிவு எடுக்கலாம் என தெரிகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் முன் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. தனித்து நிற்பது, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இணைவது. அதிலும் ஒரு சிக்கல் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக பாரம்பரிய காங்கிரஸ் ஏற்று அந்தக் கூட்டணியில் இணையவேண்டும்.
சில சீட்டுகளுக்காக இரு கட்சிகளும் பிரிந்தால் 5 ஆண்டுகள் உருவாக்கிய நல்ல அரசியல் மதிப்பு இரு கட்சிகளுக்குமே பாதிப்பாக அமையும். எதிர்ப்பார்த்த முடிவும் எட்டப்படுமா? என்பதும் சந்தேகமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT