கமல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்: இன்று ஆலந்தூரில் தொடக்கம்

கமல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்: இன்று ஆலந்தூரில் தொடக்கம்
Updated on
2 min read

காலில் நடந்த அறுவை சிகிச்சைக்குப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் சென்னை ஆலந்தூரில் இன்று மாலை தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக பெரிய அளவில் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ள நிலையில் சத்தமில்லாமல் கமலின் மக்கள் நீதி மய்யமும் களத்தில் இறங்கியுள்ளது. மூன்றாவது அணி என ஒன்று அமையுமானால் அது மக்கள் நீதி மய்யம் தலைமையில் அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். கமல் தனது பிரச்சாரத்தில் நேர்மை, ஊழலுக்கு எதிரான நிலை என்பதை முன்னிறுத்தி கழகங்களுடன் கூட்டணி இல்லை என அறிவித்து பிரச்சாரம் செய்கிறார்.

எம்ஜிஆரின் தம்பி என தன்னை முன்னிறுத்தி மக்களிடம் தனது கொள்கைகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசி வருகிறார். சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கமல் இடையிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். தனது காலில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட கமல் அதன் பின்னர் வேகம் காட்டி வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வேட்பாளர் அறிவிப்புக்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்க்காணலும் நடத்திவருகிறார். இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை இன்று மாலை ஆலந்தூர் தொகுதியிலிருந்து தொடங்குகிறார். தொகுதிக்கு உட்பட்ட சென்னை ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி ரேஸ்கோர்ஸ், நந்தனம், மயிலாப்பூர் லஸ் கார்னர் என 25 இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார். நேரத்தை பொறுத்து 25 இடங்களில் 4 அல்லது 5 இடங்கள் தேர்வு செய்து, அதில் கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

வேளச்சேரி, சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூரில் பரப்புரை நிகழ்த்தும் அவர் இரவு 8-00 மணி அளவில் மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் கமல் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் எம்ஜிஆர் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பரங்கிமலை தொகுதி தற்போது ஆலந்தூர் தொகுதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு போட்டியிடுவார் எனவும், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in