Published : 03 Mar 2021 09:54 AM
Last Updated : 03 Mar 2021 09:54 AM
திராவிட இயக்கங்கள் வென்றெடுத்த சமூக நீதியை ஒழிக்க நினைப்பவர்கள், அதிமுக முகக்கவசம் அணிந்து கொண்டு அதிமுகவையே இயக்குகிறார்கள் என கனிமொழி எம்.பி. பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக மகளிரணி சார்பில் மார்ச் 2-ம் தேதி அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்வில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேசியதாவது:
“இந்த நிகழ்ச்சி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி மட்டுமல்ல. அவர் சொல்வதைப் போல தமிழகத்தை மீட்டெடுக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக, விடியலை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்லக்கூடிய நிகழ்ச்சியாக இதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தலைவர் கருணாநிதி உருவாக்கித் தந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன?. மணிக்கணக்கில் நின்று ஸ்டாலின் அன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தந்த சுழல் நிதி இன்றும் பேசப்படுகிறது. ஆனால் அந்த சுய உதவிக் குழுக்கள் இன்று செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றது.
இன்று தமிழகத்தில் நம்பிக்கைக் கீற்று இல்லாத ஒரு சூழலை பார்க்க முடிகிறது. வேலை இல்லை. எந்தப் பகுதிக்கு போனாலும் வேலை இல்லை. ஒரு சமூகத்தில் வேலை இல்லை என்றால் என்ன நடக்கும்? வேலை கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி வேலைக்கு அனுப்புபவர் களாக இருந்தாலும் சரி ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம். ஏனென்றால் குடும்பத்தில் பணம் ஈட்டி வரக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நம்பிக்கை தொழில் நடத்துபவர்கள் இடத்திலும் உண்டு.
அதனால் வேலை இருக்கிறது என்ற ஒரு சூழலில் அந்த வேலை ஆண்களுக்குத்தான் தரப்படும். பெண்களுக்கான வேலைவாய்ப்பு அவர்களுக்கான எதிர்காலம் இன்று அறவே இல்லாத ஒரு சூழல். படித்த இளைஞர்களுக்கும் வேலை இல்லை. பெண்களுக்கும் வேலை இல்லை.
தங்கள் சொந்தக்காலில் நிற்க கூடிய அந்தத் தகுதியையே இழந்து விடக்கூடிய நிலைக்கு பெண்களை தள்ளிக்கொண்டு இருக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி. இந்தத் தேர்தலில் நாம் எதிர்த்துப் கொண்டிருப்பது அதிமுகவை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக வெறும் முகக் கவசம்.
அதிமுக என்பது வெறும் ஒரு பிம்பம். அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களை யார் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர்களுக்குப் பின்னால் நின்று இயக்கக் கூடிய அவர்கள் (பாஜக) திராவிட இயக்கம் எதற்காகவெல்லாம் போராடியதோ, சமூக நீதிக்காக, பெண்ணுரிமைக்காக, சமூகத்தில் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், சுயமரியாதை இருக்க வேண்டும் என்று போராடிக் கொண்டு வந்திருக்கக் கூடிய இந்த நிலையை ஒழித்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு நாம் இந்தத் தேர்தலிலே பணியாற்ற வேண்டும்.
ஏனென்றால் எந்தச் சமூகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சமூகத்தில் சாதி என்பதை கொண்டுவந்து நிலை நிறுத்தும்போது மதம் என்பதைக் கொண்டு வந்து நிறுத்தும்போது அது எந்த மதம் என்ற வித்தியாசம் கிடையாது. மதம் என்ற ஒன்றை அரசியலாக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு மத நம்பிக்கை இருக்கிறது. அதைப் பற்றி விவாதங்கள் இருக்கலாம். ஆனால் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த மதத்தை அரசியலாக கொண்டு வந்து நிறுத்தும் போது அங்கே முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான் பெண்களின் உரிமைகள் தான்.
நாம் பல தடவை கேட்டிருக்கிறோம். பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் போது ஒரு மதத்தின் எல்லையில் நின்று பேசக்கூடியவர்கள் என்ன விதமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று நமக்குத் தெரியும். அந்தப் பெண் ஏன் அங்கே போனாள்.
அந்தப் பெண் எதற்கு வீட்டை விட்டு வெளியே போனாள். அந்த பெண் ஏன் அவனை சகோதரன் என்று அழைக்கவில்லை. என பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மீது கேள்விகள் மழையாகப் பொழிகின்றனவே தவிர இந்த சமூகத்திலே அந்தப் பெண் நடத்தப்பட்ட விதம், அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை இவர்களுக்கு இருப்பதில்லை.
மறுபடியும் கொண்டுபோய் நம்மையெல்லாம் கொட்டடியில் சமையலறையிலேயே மூடி வைத்து கதவை அடைப்பதற்குத்தான் இது வழிவகுக்குமே தவிர வேறு எதற்கும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மறுக்கப்படும், உரிமைகள் மறுக்கப்படும். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை இருக்கிறது என்று சட்டத்தை தலைவர் கருணாநிதி கொண்டு வந்தார். நாளைக்கு நீங்களே ஒரு சொத்தாக மாறிவிடுவீர்கள். சம உரிமை இருக்காது. அப்படி மாற்றப்பட்டு விடுவோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே இருக்கக்கூடிய ஆட்சி முதுகெலும்பு என்னவென்று தெரியாத ஆட்சி. எதைக் கொண்டு வந்தாலும் காலில் விழுந்து ஏற்றுக் கொள்கிறோம் ஏற்றுக் கொள்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை தவிர வேறு எதையும் சொல்வதற்கு தைரியமற்ற ஆட்சி.
ஒவ்வொரு முறையும் மத்திய அரசாங்கம் தவறு செய்யும் பொழுது எழக்கூடிய முதல் குரல் தலைவர் ஸ்டாலின் குரல் தமிழகத்தின் குரல். அந்தத் ஸ்டாலின் முதல்வர் பொறுப்பில் இருக்க வேண்டும் தமிழகத்தை மீட்டெடுத்து காப்பாற்ற வேண்டும். அதேபோல இங்கே இருக்கக்கூடிய மக்களின், பெண்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பில் தமிழகத்திற்கு அரணாக இருக்க வேண்டும்.
செய்திகளைக் கொண்டு சேர்க்கக் கூடிய கடமையும் நமக்கு இருக்கிறது. ஏனென்றால் பொய் பிரச்சாரம் செய்வதில் கைதேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். உண்மையான பிரச்சாரத்தை ஸ்டாலின் செய்திகளை கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்”.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT