Published : 03 Mar 2021 09:31 AM
Last Updated : 03 Mar 2021 09:31 AM
"பரபரப்பான தேர்தல் அரசியல் சூழலில், காமெடி செய்ய ஆட்கள் வேண்டும். டிடிவி தினகரன் காமெடி செய்கிறார்" எனக் கிண்டல் செய்துள்ளார் அமைச்சர் பாண்டியராஜன். மேலும், சுதீஷின் பேஸ்புக் பதிவு குறித்த கேள்விக்கு 'முதல்வர் எனக் கூற தகுதியானவர் விஜயகாந்த்' என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் பாமக, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 250 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் பாண்டியராஜன்.
அப்போது அவர் கூறியதாவது:
பரபரப்பான தேர்தல் அரசியல் சூழலில், காமெடி செய்ய ஆட்கள் வேண்டும். டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார். அமமுக தலைமையில் அதிமுக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை. பாமகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அதுபோலவே கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடனும் விரைவில் உடன்பாடு ஏற்படும். இதிலிருந்து திசைமாற்ற யார் என்ன முயற்சி செய்தாலும் அதில் அதிமுக சிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் எனக் கூற தகுதியானவர் விஜயகாந்த்..
தொடர்ந்து தேமுதிகவின் எல்.கே சுதீஷ் பேஸ்புக் பதிவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. தேவையை அவர்கள் கூறியுள்ளார்கள் எங்களால் என்ன தர முடியுமோ அதை நாங்கள் தருவோம். முதல்வராக வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும், 'எங்கள் முதல்வர்' எனக் கூறுவதற்கு தகுதியான மனிதர் விஜயகாந்த்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT