Published : 03 Mar 2021 03:24 AM
Last Updated : 03 Mar 2021 03:24 AM

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

நாமக்கல் / ஈரோடு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறை மூலம் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.

எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் அருகில் உள்ள கரோனா தடுப்பூசி மையங்களில் ஆதார் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்களை எடுத்துச்சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார்ரூபவ், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் த.கா. சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னுரிமை அடிப்படையில்

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், ஆசிரியர்கள் உட்பட 13 ஆயிரத்து 157 அரசு அலுவலர்கள், 2415 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 1201 காவல் துறை அலுவலர்கள் மற்றும் 1540 முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல்படை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, முன்னுரிமை அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே, தேர்தல் பணிகளில் பணியாற்ற உள்ள அனைத்து பணியாளர்களும், இலவசமாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x