Published : 09 Jun 2014 08:29 AM
Last Updated : 09 Jun 2014 08:29 AM
தனியார் பள்ளி பெண் நிர்வாகியையும் அவரது உறவினரையும் வெட்டிக் கொன்ற கார் ஓட்டுநர், அந்த வீட்டில் இருந்த கடத்தப்பட்ட சிறுமிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வீடு முதல் ரஜினி வீடு வரை ஊர் ஊராக சுற்றிக்காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்த தனுஷ்ஸ்ரீ (40), கடந்த மார்ச் 22-ம் தேதி உறவினர் செந்தில்குமாருடன் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது வீட்டில் வேலை பார்த்த கார் ஓட்டுநரான திருப்பூர் மங்கலப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் (34), இருவரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த ரூ. 23 லட்சத்துடன் தனுஷ்ஸ்ரீயின் மகள் துளசி சியாமளாவையும் (13) கடத்திச் சென்றார்.
கடந்த 3 மாதமாக சிறுமி துளசி சியாமளாவுடன் தலைமறைவாக இருந்த காளீஸ்வரனை ஞாயிற்றுக் கிழமை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கூறியது:
தனுஷ்ஸ்ரீ வீட்டில் காளீஸ்வரன் 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். தனுஷ்ஸ்ரீக்கு உதவியாக வீட்டுப் பணிகள் முதல், பள்ளி, வங்கி வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துள்ளார். அவரது மகள் துளசி சியாமளாவையும் தினசரி காரில் பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனுஷ்ஸ்ரீக்கு உதவியாக, அவரது உறவினர் செந்தில்குமார் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்துபோய் உள்ளார்.
ரூ. 23 லட்சத்துடன் தலைமறைவு
செந்தில்குமாருக்கு காளீஸ்வரனை பிடிக்கவில்லை. அதனால், தனுஷ்ஸ்ரீ காளீஸ்வரனை கடந்த மார்ச் மாதத்துடன் வேலையைவிட்டு நின்று கொள்ளும்படி கூறியுள்ளார்.
அதனால் தனுஷ்ஸ்ரீ, அவரது உறவினர் செந்தில்குமார் மீது காளீஸ்வரன் ஆத்திரத்தில் இருந்தார். கடந்த மார்ச் 21-ம் தேதி தனுஷ்ஸ்ரீ, தனது உறவினர் செந்தில்குமாருடன் சென்று வங்கியில் ரூ. 23 லட்சத்தை எடுத்துள்ளார். அந்தப் பணத்தை பீரோவில் வைத்துள்ளார். இதைப் பார்த்த காளீஸ்வரன், அன்று இரவே தனுஷ்ஸ்ரீயையும் செந்தில்குமாரையும் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்தார்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ. 23 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மற்றொரு அறையில் தாய் கொல்லப்பட்டது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த துளசி சியாமளாவை காரில் கடத்திச் சென்றார். கொள்ளையடித்த பணத்தில் ரூ. 17 லட்சத்தை ஊட்டியில் உள்ள சகோதரி வீட்டில் கொடுத்துவிட்டார்.
குமரி முதல் காஷ்மீர் வரை
மீதி பணத்துடன் துளசி சியாமளாவையும் அழைத்துக் கொண்டு ஊர்ஊராக கடந்த 3 மாதமாக குமரி முதல் காஷ்மீர் வரை காளீஸ்வரன் சுற்றிக் காட்டியுள்ளார். தாஜ்மகால், அமிர்தசரஸ் பொற்கோவில், ஆக்ரா கோட்டை, இந்தியா - பாகிஸ்தான் வாகா எல்லை, ஷீரடி சாய்பாபா கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர். மும்பையில் சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன் வீடுகளையும் காட்டியுள்ளார். சென்னையில் ரஜினிகாந்த் வீட்டையும் காட்டியுள்ளார்.
டி.வி.யில் பார்த்த இடங்களை நேரில் பார்த்த சந்தோஷத்தில் துளசி சியாமளாவும் காளீஸ்வரன் சொன்னதையெல்லாம் நம்பத் தொடங்கினார். அப்போது காளீஸ்வரன் துளசியின் தாயையும், உறவினர் செந்தில்குமாரையும் வெட்டிக் கொன்றதைத் தெரிவித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்து நம்ப வைத்துள்ளார்.
செல்போனில் பேசியபோது கண்டுபிடிப்பு
கடந்த சில நாள்களாக இருவரும் சென்னையில் தங்கி உள்ளனர். அப்போது காளீஸ்வரன், ஊட்டியில் உள்ள தனது சகோதரியிடம் செல்போனில் பேசியபோது, அவர்கள் சென்னையில் இருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். சனிக்கிழமை இரவு அவர்கள் கோவைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காளீஸ்வரனையும், சிறுமியையும் கோவை பஸ் நிலையத்தில் பிடித்தோம்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT