Published : 03 Mar 2021 03:27 AM
Last Updated : 03 Mar 2021 03:27 AM

கண்டுகொள்ளப்படாத பழைய பாலங்கள்: மதுரையில் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள மேயர் முத்து பாலத்தின் அடித்தூண் பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. படம்: ஆர்.அசோக்

மதுரை

மதுரையில் புதிய பாலங்கள் கட்டு வதில் காட்டும் அக்கறையை, பழைய பாலங்கள் பராமரிப்பில் காட்டாததால் சிதிலமடைந்த பாலங்களில் அச்சத்துடன் மக்கள் பயணிக்கின்றனர்.

மதுரை மாநகரில் கடந்த 5 ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அதில் மேம் பாலங்கள், பறக்கும் பாலங்கள் கட்டும் பணிகள் நடக்கின்றன. காளவாசல் சந்திப்பில் ரூ.54 கோடியில் மேம்பாலம் கட்டித் திறக்கப்பட்டுள்ளது, நத்தம் சாலையில் தல்லாகுளம்-செட்டிக்குளம் இடையே 7.3 கிமீ. நீளத்துக்கு ரூ.678 கோடியில் பிரம்மாண்ட பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. வைகை ஆற்றின் குறுக்கே அருள்தாஸ்புரம், செல்லூரில் தரைப்பாலங்களை இடித்து 2 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

தற்போது குருவிக்காரன் சாலையில் வைகை ஆற்று தரைப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. மேலும் ஓபுளா படித்துறையில் உள்ள தரைப்பாலத்துக்குப் பதிலாக ரூ.23 கோடியில் மேம்பாலம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் 12-ம் தேதி இதற்கான டெண்டர் விடப்படுகிறது. ஆனால், பாரம்பரியமான பழைய பாலங்களை பராமரிக்க உள்ளூர் அமைச்சர்களும், அதிகாரிகளும் அக்கறை காட்டவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது: நெரிசல் மிகுந்த இடங்களில் புதிய பாலங்கள் கட்டுவது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அதில் காட்டும் அக்கறையில் சிறிதளவாவது பழைய பாலங்களைப் பராமரிப்பதிலும் காட்ட வேண்டும். பாரம்பரிய அடையாளங்களான ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் பாலம், மதுரைக் கல்லூரி அருகே உள்ள மேயர் முத்து பாலம், மதுரா கோட்ஸ் மேம்பாலம் போன்றவை பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், அதன் கீழ்ப்பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. நூற்றாண்டு கண்ட ஏ.வி.மேம்பால அடித் தூண்கள் சில இடங்களில் சேதமடைந்துள்ளன. அதனைச் சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பாலத்தில் வழக்கம்போல் அனைத்து வாகனங்களும் செல்கின்றன.

திருப்பரங்குன்றம் சாலையி லுள்ள மேயர் முத்து பாலத் தின் அடிப்பகுதிகளும் சிதில மடைந்துள்ளன. யானைக்கல் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. எனவே விபத்துகள் ஏற்படும் முன் பழைய பாலங்களை ஆய்வு செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x