Published : 02 Mar 2021 10:07 PM
Last Updated : 02 Mar 2021 10:07 PM
தேர்தலில் வாக்குப் பிளவை ஏற்படுத்தி திமுகவை ஆட்சிக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சசிகலாவும், டிடிவி தினகரனும் செயல்படுகின்றனர் என பாஜக பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை புதூரில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. புதூர் மண்டல தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் பாஜக பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன் பேசினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக- பாஜக கூட்டணி மிக விரைவில் இறுதி செய்யப்பட்டு பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும். தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெறும்.
எங்கள் தலைமையில் அதிமுக போட்டியிட வேண்டும் என டிடிவி தினகரன் பேசியதை ஏற்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தொடர்ந்து வாக்கு வங்கி சரிவை சந்தித்து வரும் டிடிவி தினகரன், 5 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை அமமுக தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூறுவது அவரது அறியாமையை காட்டுகிறது.
இந்தத் தேர்தலில் அமமுக வாக்குப் பிளவை ஏற்படுத்தி திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தால் டிடிவி தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது.
வாக்குப் பிளவை ஏற்படுத்தி திமுகவை ஆட்சிக்கு வர வைக்க வேண்டும் என்பதே சசிகலா, டிடிவி தினகரனின் நோக்கமாகவும், திட்டமாகவும் உள்ளது.
இருவரும் திமுகவின் பீ டீமாக செயல்படுகின்றனர். இது முற்றிலும் கண்டிக்கதக்கது. ஜனநாயகத்தில் இதுபோன்ற போக்குகளை கண்டிக்க வேண்டும்.
அதிமுக- அமமுக இணைப்புக்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அமமுக இணைப்பு பற்றி முடிவெடுக்க வேண்டியது அதிமுக தான். அதிமுக என்ன முடிவெடுத்தாலும் வரவேற்போம்.
பாஜக அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிகவும் உள்ளது. தேமுதிக உரிமையுடன் கோபப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதில் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT