Last Updated : 05 Nov, 2015 03:00 PM

 

Published : 05 Nov 2015 03:00 PM
Last Updated : 05 Nov 2015 03:00 PM

மணல் கொள்ளை, மதுப் பிரச்சினை: ஸ்டாலினுக்கு ராமதாஸ் சரமாரி கேள்வி

"கடந்த திமுக ஆட்சியில் மணல் எடுக்கப்பட்டதில் 1,19,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இது குறித்து ஸ்டாலின் விளக்கம் தரத் தயாரா?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசியது:

''தமிழக அரசு மீது தமிழக மக்களும், நீதிமன்றங்களும் நம்பிக்கை இழந்துவிட்டன. அதனால்தான் மத்திய பாதுகாப்புப் படை விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லா தன்மையை உறுதி செய்துள்ளது.

திமுக, அதிமுக தன் சொந்த விறுப்பு வெறுப்புக்கு காவல்துறையைப் பயன்படுத்திக்கொண்டனர். இதனால் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக சொல்லப்பட்ட தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

தற்போதைய அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் அக்டோபர் 2015-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 9,228 கொலைகள் நடந்துள்ளன. 97,000 கொள்ளைச் சம்பவங்கள், திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சலே தமிழகத்தில் இல்லை என்று மறைக்கும் முனைப்பில் தமிழக அரசு ஈடுபடுகிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூரில் நமக்கு நாமே பயணத்தில் பேசிய ஸ்டாலின் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும். பாலாறில் மணல் எடுக்கப்படுவதற்கு ரூ.5275 கோடி வருமானம் காட்ட வேண்டிய கணக்கில் வெறும் 76 கோடி மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 2006- 11 வரை தமிழகத்தில் மணல் எடுக்கப்பட்டதற்கு 1, 25,000 கோடி வருமானம் வந்திருக்க வேண்டும். ஆனால், 674.2 கோடி மட்டுமே வருமானம் வந்ததாக கணக்கு காட்டியது. மணல் எடுக்கப்பட்டதில் 1,19,000 கோடி இழப்பு குறித்து ஸ்டாலின் விளக்கம் தரத் தயாரா?

தற்போதைய நான்காண்டு கால அதிமுக ஆட்சியில் 1,20,000 கோடி வருமானத்துக்குப் பதிலாக, 613 கோடியை மட்டும் அதிமுக அரசு கணக்கு காட்டியுள்ளது. திமுக, அதிமுக வின் இந்த கணக்குகள் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணை தேவை.

மேலும், ஸ்டாலின் மதுவை ஒழிப்பதாக சொல்லி வருகிறார். தமிழகத்தில் இருக்கும் 50% மது ஆலைகள் திமுகவைச் சார்ந்தவர்கள்தான்.

1957ல் இருந்து கடந்த 58 ஆண்டுகளாக திமுக தேர்தலில் தனித்து நின்றது இல்லை. தற்போது திமுக தனித்து தேர்தலில் நிற்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. தனித்து நிற்பதாக திமுக அறிவித்தால் நான் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் உடற்கல்வி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 16,549 ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x