Published : 02 Mar 2021 08:26 PM
Last Updated : 02 Mar 2021 08:26 PM

பெரியண்ணன் மனோபாவத்துடன் திமுக நடக்கிறதா?- கே.என்.நேரு பதில்

சென்னை

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தோழமைக் கட்சிகளிடம் பெரியண்ணன் மனோபாவ அணுகுமுறையுடன் திமுக நடக்கிறதா என்கிற கேள்விக்கு கே.என்.நேரு பதிலளித்தார்.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கே.என்.நேரு பதில் அளித்தார்.

கூட்டணியில் பிரச்சினையா?

நீங்கள் நினைப்பது போன்று எதுவுமே இல்லை. சுமுகமாகச் செல்கிறது.

மக்களவைத் தேர்தலில் உடனடியாகப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் தற்போது ஏன் இவ்வளவு இழுபறி?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக உள்ளது. எப்போதும் ஒரே கட்டமாகப் பேச்சுவார்த்தை முடிந்ததில்லை. உள்துறை அமைச்சர் வந்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியே அங்கு இதுவரை முடிவு காண முடியவில்லை. அங்கேயே முடிவு எட்டப்படவில்லை. எங்களிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?

கருணாநிதி இருந்தபோது இப்படி இருந்தது இல்லையே?

அப்போதும் இதேபோன்றுதான் பலகட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எப்படி எடுத்தவுடன் அவர்கள் கேட்பதைக் கொடுக்க முடியும். பேசிப்பேசித்தான் கொடுக்க முடியும்.

திமுக 180 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக முடிவு செய்ததால் இந்த இழுபறி என்கிறார்களே?

எங்களுக்கு இட்ட பணி தோழமைக் கட்சிகளுடன் பேசுவது. அனைத்துக் கட்சிகளுடன் பேசிவிட்டோம். பெரும்பாலான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் எத்தனை தொகுதிகளில் நிற்கிறீர்கள்?

பெரும்பாலான தொகுதிகளில் நிற்கிறோம்.

உதயசூரியன் சின்னத்தில் நிற்க வற்புறுத்துகிறீர்கள் என்று சொல்கிறார்களே?

ஒரு கட்சி புதிய சின்னம் வாங்கி அதை மக்களிடம் கொண்டு சென்று விளம்பரப்படுத்துவதை விட உதயசூரியன் அறிமுகமான சின்னம். அதில் அவர்களும் நிற்க விருப்பப்படுகிறார்கள். நாங்களும் கொடுக்க விரும்புகிறோம். இது கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்களுக்கும் உள்ள பிரச்சினை. இதில் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துள்ளதா?

திமுகவின் அணுகுமுறை பெரியண்ணன் மனோபாவத்துடன் உள்ளதாகச் சொல்கிறார்களே?

கம்யூனிஸ்ட் கட்சியிடமும், காங்கிரஸ் கட்சியிடமும் அப்படி அணுக முடியும் என்று நினைக்கிறீர்களா? சுமுகமாகப் பேசினால்தான் எதையும் முடிக்க முடியும். ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது. அவர் கூட்டணி பற்றிப் பேச்சுவார்த்தை நடக்கும்போதே அதிமுக போட்டியிடும் தொகுதியை அறிவித்துவிட்டார்.

மீதித் தொகுதிக்குப் பேச வாங்க என்றார். நாங்கள் அது மாதிரியா நடக்கிறோம். திரும்பத் திரும்ப அழைத்துப் பேசுகிறோம். நாங்கள் எப்படி பெரியண்ணன் மாதிரி நடக்க முடியும்.

உதயநிதி தேர்தலில் போட்டியில்லை என்கிறார்களே?

அது ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அதில் உண்மையில்லை.

அவர் தேர்தலில் போட்டியில்லையா?

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றுதானே பணம் கட்டுவார்கள்.

அவருக்கு சீட்டு கொடுக்கப்படுமா?

எங்கள் தலைவர் முடிவெடுக்க வேண்டியது குறித்து எங்களிடம் கேட்கிறீர்களே. நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

இவ்வாறு கே.என்.நேரு பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x