Published : 02 Mar 2021 07:28 PM
Last Updated : 02 Mar 2021 07:28 PM
கட்சியின் முதல் நிலை தலைவர்களுக்காக சென்னை, மதுரை உள்பட 9 மாவட்டங்களில் அதிக தொகுதி தர வேண்டும் என அதிமுகவிடம் பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
தமிழகம் முழுவதும் அதிக செல்வாக்குள்ள 35 தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை ஏ பட்டியலிலும், திருச்சி, தஞ்சை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை பி பட்டியலிலும் பாஜக வைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் ஏ மற்றும் பி பட்டியலில் உள்ள 9 மாவட்டங்களில் கட்சியின் முதல் நிலை தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.
இந்த மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கான முக்கியத் தொகுதிகளை பாஜக கேட்பதால், அந்தத் தொகுதிகளை வழங்குவதற்கு அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. அந்தத் தொகுதிகளுக்கு பதில் வேறு மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்த போதும் அதை ஏற்காமல் பாஜக உள்ளது.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகள் வரை கேட்டு வருகிறோம். 30 தொகுதிக்கு குறையக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளோம். தமிழகத்தில் பாஜக அமைப்பு இல்லாத இடங்களே இல்லை. வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கான பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியிருப்பதால், பாஜகவுக்கு 35 தொகுதிகள் வரை கேட்கிறோம்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம். அதிமுக கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள் மட்டுமே தொடர்ந்தால் தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. வேறு கட்சிகள் சேர்ந்தால், அந்த கட்சிகளுக்காக தொகுதி எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT