Published : 02 Mar 2021 06:20 PM
Last Updated : 02 Mar 2021 06:20 PM

10.5% இட ஒதுக்கீடு தேர்தலுக்கான தற்காலிக அறிவிப்பு; தவறிழைத்தவர்கள் தலையில் இடியாக இறங்கும்: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை

இட ஒதுக்கீடு விஷயங்களில் பொதுமக்கள் அபிப்ராயம் கேட்டு அணுக வேண்டும். அண்ணன் தம்பிகளாக வாழும் சமுதாய மக்களிடையே சண்டையை உருவாக்கி ஏதோ ஒரு தொகுதியில் வெல்வதற்காக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அண்மையில் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனம் எதையும் வைப்பதில்லையே?

இல்லையே. நான் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் என் கருத்தை வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். பட்ஜெட்டை விமர்சித்துள்ளேன். அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. உங்கள் பார்வையில் அது வேறு மாதிரியாகப் பட்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது. அதிமுக, பாஜக ஆட்சியைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தத் தேர்தலில் சசிகலாவின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது?

அதை அவர்தான் தெரிவிப்பார். அவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் அப்போது கேளுங்கள். அவர் பதில் சொல்வார்.

துரோகி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் திமுகவைத் தோற்கடிக்க, உங்களிடம் பேச முன்வந்தால் பேசத் தயாரா?

நீங்கள்தான் திரும்பத் திரும்ப அதிமுக, பாஜக கூட்டணி வந்தால் என்று கேட்கிறீர்கள், அவர்கள் வரமாட்டார்கள் என்று தெரியும். நீங்கள் ஆசைப்படுவதால் சொல்கிறேன். எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் தயார் என்கிறேன். உடனே அடுத்த கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.

அதிமுக, பாமக, பாஜக மூவரும் கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

இதற்கு அடுத்த கட்சியைப் பற்றி பதிலளிப்பது சரியாக இருக்காது. ஒரு கூட்டணி குறித்து தவறாகச் சொல்லக்கூடாது. திமுகவை வீழ்த்துவதுதான் எங்கள் குறி. அதில் எந்த அம்பில் வீழ்ந்தாலும் சரி.

10.5% உள் ஒதுக்கீடு குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. உங்கள் நிலைப்பாடு என்ன?

அமமுக நிலைப்பாட்டை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்கள் அபிப்ராயம் கேட்டு அணுக வேண்டும். அண்ணன் தம்பிகளாக வாழும் சமுதாய மக்களிடையே சண்டையை உருவாக்கி ஏதோ ஒரு தொகுதியில் வெல்வதற்காக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள்.

எந்த சாதிக்கும், பிரிவுக்கும் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக பங்கீடாக இருக்கவேண்டும் என்பதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கக்கூடாது.

தேர்தலுக்காகத் தற்காலிகமாக அறிவிக்கும் இந்த அறிவிப்புகள் அனைத்துமே பின்னர் தலையில் இடி இறங்குவது போன்று இறங்கப் போகிறது தவறு செய்தவர்களுக்கு.

முன் தேதியிட்டுப் பணி ஆணை வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வருகிறதே?

அப்படி என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிகிறது. முன் தேதியிட்டாலே பயம் தானே.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x