Published : 02 Mar 2021 04:15 PM
Last Updated : 02 Mar 2021 04:15 PM

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு, இந்தி திணிப்பு சாதனையை சொல்லி பிரதமர் வாக்கு கேட்பாரா? -கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை

திமுக கூட்டணியை மட்டுமே விமர்சித்து பேசும் பிரதமர் உள்ளிட்டோர் அவர்கள் சாதனையை எப்படிச் சொல்ல முடியும், பெட்ரோல்,டீசல்,எரிவாயு விலை உயர்வு, இந்தி திணிப்பு குறித்து சாதனையாக சொல்லி வாக்கு கேட்க முடியுமா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

திமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் பிரச்சினையா?

அது ஒன்றும் பிரச்சினை இல்லை. இது மாதக்கணக்கில் நடக்கும் பிரச்சினை இல்லை. கேட்கும் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதால் பேச்சுவர்த்தை சற்று கூடுதலாக உள்ளது அவ்வளவுதான்.

விருப்பப்பட்டியல் எத்தனை தொகுதி கொடுத்துள்ளீர்கள்?

எத்தனை தொகுதிகள் என்பது பத்திரிக்கைகள் மூலம் நடத்தப்படுவது நல்லதாக இருக்காது. உடன் பாடு ஏற்பட்டவுடன் முதலில் உங்களிடம்தான் சொல்லப்போகிறோம்.

தொகுதிகள் முதலிலா? எண்ணிக்கை முதலிலா?

முதலில் எண்ணிக்கைத்தான் பின்னர் தான் தொகுதி பற்றி பேசுவோம். இன்று எங்கள் செயற்குழு நடந்தது. அதில் எங்கள் அகில இந்திய பொதுச் செயலாளர் சென்னை வருகிறார். பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து பேசினோம். முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளோம். எனவே நடைபெறுகின்ற தேர்தலில் இந்த அணி வெற்றிபெற முக்கியமாக பாடுபடுவோம்.

திமுக அணியின் வெற்றியை தடுப்பதே ஒரே நோக்கம் என்று கூறியுள்ளார், அனைவரும் இதே தொனியில் பேசுகின்றனர் பயம் காரணமா?

அதுதானே யதார்த்தம், திமுக கூட்டணி வெற்றிப்பெறவே வாய்ப்பு அதிகம் இருக்கு. மக்களவை தேர்தலில் அதுதானே நடந்தது. அவர்களுக்குள் ஒருமித்த முடிவுக்கே வரவில்லையே. அதிமுகவா? அமமுகவா? இவர்கள் இருவருக்குள் உடன்பாடு ஏற்படுமா? ஏற்படாதா? என்கிற குழப்பங்கள் அவர்களிடம் உள்ளது. அது மில்லியன் டாலர் கேள்வி அல்லவா? அதை மறக்கடிக்க திமுக அணியை வெல்ல விடமாட்டோம் என்று பேசுகிறார்கள்.

பாஜக, அதிமுக அவர்கள் சாதனைப்பற்றி பேசாமல் திமுக வரக்கூடாது என்றே பேசி வருகிறார்களே ஏன்?

பாஜக ஏதாவது சாதனை செய்திருந்தால் தானே பேச முடியும். அவர்கள் செய்திருப்பது எல்லாம் வேதனையும் சோதனையுமாக உள்ளது. ஆகவே அதைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. அதனால் எதிர்க்கட்சிகளை குறைச் சொல்லி பேசி வருகிறார்கள்.

எதைச் சொல்லி பேச முடியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பேச முடியுமா?, தொடர்ந்து இந்தியை திணிப்பதைப் பற்றி பேச முடியுமா? சமையல் எரிவாயு பற்றி பேச முடியுமா? சமஸ்கிருத திணிப்பு பற்றி பேச முடியுமா? எதைப்பற்றி பேச முடியும்.

பிரதமர் தமிழில் பேசுகிறோம், தமிழில் பேசுகிறோம் என்று சொல்லிக்கொள்கிறார். தமிழை அழித்துவிட்டு அங்கு இந்தியை திணித்துக்கொண்டு தமிழைப்பற்றி அக்கறையாக பேசுகிறேன்னு சொல்லிக்கொண்டு இருக்கிறார். மற்றபடி பாஜக ஆட்சியினால் வேதனையும் சோதனையும் தான் அதிகம்.

அதைச் சொல்வதற்கு மாறாக எதிர்கட்சிகளை குறைச் சொல்லி வெற்றி பெறலாம் என்று பேசுகிறார்கள். சமீபமாக பாஜக தேர்தலில் பெரிய அளவில் எந்தத்தேர்தலிலும் வெற்றிப் பெறவில்லை. பீஹாரிலேயே தப்பித்தோம் பிழைத்தோம் என்று தில்லுமுல்லு செய்துதான் வென்றார்கள். பஞ்சாப் உள்ளாட்சித்தேர்தலில் படுதோல்வியை அடைந்தார்கள்.

ஆகவே தோல்வியை மறைக்க எதையாவது இட்டுக்கட்டி சொல்கிறார்கள். ஆகவே வரும் தேர்தலில் அவர்களும் கூட்டணிக்கட்சிகளும் படுதோல்வி அடையும்.

தமிழ்நாட்டில் தேர்தல் நியாயமாக நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா?

அவர்கள் அனைத்து வழிமுறைகளையும் தில்லு முல்லுக்களை செய்து வெற்றி பெற முயற்சிப்பார்கள். போலீஸ் அவர்களிடம் உள்ளது, துணை ராணுவப்படை உள்ளது, அதிகாரிகள் அவர்கள் கையில் உள்ளனர், மத்திய மாநில அரசுகள் அவர்கள் கையில் உள்ளது. அதனால் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அது நடக்காது இங்கு அந்த தில்லுமுல்லு எல்லாம் நடக்காது மோசமான தோல்வியை அடைவார்கள்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x