Published : 02 Mar 2021 03:25 PM
Last Updated : 02 Mar 2021 03:25 PM

வன்னியர் உள் ஒதுக்கீடு; சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற அதிமுக - பாஜக - பாமக கூட்டுச் சதி: திருமாவளவன் விமர்சனம்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

உள் ஒதுக்கீட்டின் பெயரால் சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற அதிமுக - பாஜக - பாமக கூட்டுச் சதி செய்வதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (மார்ச் 02) வெளியிட்ட அறிக்கை:

"உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல் திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் பாஜகவும் அதன் முழுக் கட்டுப்பாட்டில் சிக்கி உழலும் அதிமுகவும் தற்போது தமிழகத்தில் கூட்டாக சதித் திட்டம் தீட்டி, தேர்தல் அரசியலில் சாதிக் காய்களை நகர்த்தி வருகின்றன.

அதாவது, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் பிடியில் கட்டுண்டு அவர்களின் இழுப்புக்கேற்ப ஆட்டம் போடும் அதிமுக அரசு, தமிழகத்தில் உள் ஒதுக்கீடு என்னும் பெயரால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலுள்ள விளிம்புநிலை சமூகங்களைக் கூறுபோட்டுச் சட்டம் ஒன்றை இயற்றியிருப்பது அதன் வெளிப்பாடுதான்.

'எம்பிசி' சமூகங்களின் இட ஒதுக்கீட்டு நலன்களை நீர்த்துப்போகச் செய்யும் இந்தக் கூட்டுச் சதியை வன்னியர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அறியாதவர்கள் அல்ல! எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அவர்கள் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியினருக்கு உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களான வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீதம் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று திடீரென பாமக கோரிக்கை எழுப்பியது. அதிமுக கூட்டணியில் அக்கட்சி இருப்பதால் தேர்தல் பேரத்துக்கென அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தது.

அதனடிப்படையில், அதிமுக அரசு கடந்த 2020 டிசம்பர் 7ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. 'தற்போதைய நிலவரத்தின்படி சாதி வாரியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அந்த ஆணையம் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்' என அதிமுக அரசு கூறியது.

ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஏ.என்.சட்டநாதன், ஜே.ஏ.அம்பாசங்கர் ஆகியோர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்குரிய ஆணையங்கள் முன்வைத்த புள்ளிவிவரங்கள் காலாவதி ஆகிவிட்டநிலையில், புதிய புள்ளி விவரங்களை நீதிபதி குலசேகரன் ஆணையம் சேகரிக்கும் என்றும், ஆறு மாதங்களுக்குள் அது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் அதிமுக அரசு அறிவித்தது.

அந்த ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களைக்கூட எட்டாத நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, உள் ஒதுக்கீடு சட்டமசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அதிமுக அரசு. அதாவது, வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி, அக்னிகுல சத்ரியா ஆகிய 7 பிரிவுகளை உள்ளடக்கி 'வன்னியகுல சத்ரியா' என்ற பெயரில் அச்சமூகத்தினருக்கு 10.5 சதவீதமும்; மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளான பரவர், மீனவர், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட 25 சாதிகள் மற்றும் சீர்மரபினர் எனப் பட்டியலிடப்பட்டுள்ள ஆப்பநாட்டு மறவர், கள்ளர், பிரன்மலைக்கள்ளர் முதலிய 68 சாதிகள் உட்பட ஆக மொத்தம் 93 சாதிகளுக்கு 7 சதவீதமும்; எஞ்சியுள்ள இசைவேளாளர் உள்ளிட்ட 26 சாதிகளுக்கு 2.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து எந்தவொரு விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர்.

இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி என்கிறபோது, உள் ஒதுக்கீடு என்பதும் சமூக நீதியின் மிகவும் குறிப்பான, நுட்பமான பரிமாணமே ஆகும். அதில், எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பாமக, அதிமுக, மற்றும் பாஜக ஆகியவை எந்த அடிப்படையில் இதனை அணுகுகின்றன என்பதே முதன்மையானது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் காலம்கடத்திய தமிழக ஆளுநர், இந்தச் சட்டத்துக்கு ஒரே நாளில் ஒப்புதல் வழங்கி இருக்கின்றார். எம்பிசி சமூகங்களைப் பிளவுபடுத்தி, இடைவெளியைப் பெருக்கி, எம்பிசி ஒற்றுமையைச் சிதைக்கும் உள்நோக்கத்துடன் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகியவை தற்காலிகமான தேர்தல் ஆதாயத்துக்காகவே கூட்டு சேர்ந்து இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதற்கு இதுவே ஆதாரமாக இருக்கிறது.

உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் மக்கள்தொகை தொடர்பான முழு தரவுகளின் அடிப்படையிலேயே அதைக் கொடுக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில் அத்தகைய எந்தத் தரவும் இல்லாத நிலையில் உள் ஒதுக்கீடு வழங்கினால் அது சட்டப்படி செல்லாததாகிவிடும்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக பாதிக்கப்படும் எம்பிசி பிரிவினரில் யாரேனும் நீதிமன்றம் சென்றால், இதற்கு தடை விதிக்கப்படும் என்பது உறுதி. இந்த உண்மை பாஜக, பாமக மற்றும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும் தெரியும். ஆனால், இந்த செல்லுபடியாகாத ஓட்டைச் சட்டத்தைக் காட்டி வன்னிய மக்களின் வாக்குகளை வாரிக் கொள்ளலாம் என அவர்கள் கனவு காண்கிறார்கள். இவர்களின் இந்த வஞ்சக சூழ்ச்சிக்கு உழைக்கும் வன்னியர் சமூக மக்கள் பலியாக மாட்டார்கள்.

இருபது விழுக்காடு கேட்டவர்கள் தற்போது எதனடிப்படையில் 1931இல் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ள 10.5 விழுக்காட்டுக்கு ஒப்புக்கொண்டனர்? பாதிக்குப் பாதியை இழப்பதற்கு அவர்கள் எப்படி உடன்பட்டனர்? அவர்கள் சொன்ன 20 விழுக்காடு என்னும் புள்ளிவிவரம் பொய்யா? அல்லது வன்னியர்களின் ஓட்டுக்காக மட்டுமே அவர்கள் நடத்துகிற நாடகமா? 9.5% இட ஒதுக்கீட்டை இழப்பதன் மூலம் பாதியளவு வன்னியர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?

மொத்தமாக எம்பிசிக்கென 20% இருந்த இட ஒதுக்கீட்டில், ஏறத்தாழ 15% அளவில் பயன்பெற்றுவந்த வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலையை இதன் மூலம் ஏற்படுத்தியுள்ளனர். இதனை வன்னியர் சமூக மக்கள் உணராதவர்கள் அல்ல!

அடுத்து, வன்னியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில், அத்தகைய கோரிக்கையையே எழுப்பாத பிற சமூகத்தினரையும் பிரித்துக் கூறு போட்டிருக்கிறது அதிமுக அரசு. வன்னியரல்லாத பிற சமூகங்களைச் சார்ந்தவர்களில் யாராவது உள் ஒதுக்கீடு கேட்டனரா? போராட்டங்களை நடத்தினரா? அவர்களை ஏன் பிளவுபடுத்த வேண்டும்? 93 சாதிகளை ஒரு கூறாகவும் (7%) 26 சாதிகளைக் கூறாகவும் (2.5%) இரண்டு வகையினராகக் கூறு போட்டது ஏன்?

இதனால் அந்தச் சமூகங்களைச் சார்ந்தவர்கள் தமக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் அறப்போராட்டத்தில் இறங்கும்படி தள்ளப்பட்டுள்ளனர். இதனால் 'எம்பிசி' மக்களின் ஒற்றுமையும் அவர்களின் பேர வலிமையும் வெகுவாகக் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையைச் சீர்குலைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டும் பாஜகவின் சனாதன சதி திட்டத்தைத்தான் அதிமுக அரசும் பாமகவும் இப்போது நிறைவேற்றி உள்ளன.

இதனை நன்குணர்ந்துள்ள வன்னியர் சமூக மக்களும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தத் தேர்தலில் பாஜக - அதிமுக - பாமக கூட்டணியைப் படுதோல்வி அடையச் செய்வார்கள். அதன் மூலம் உரிய பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x