Published : 02 Mar 2021 02:57 PM
Last Updated : 02 Mar 2021 02:57 PM
தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்றும், எல்லாத் தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் கண்டு, ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் உள்ளது.
இதற்கிடையே மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் 8 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முன்வந்ததாகவும், வைகோ தரப்பில் குறைந்தது 12 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல அல்லாமல், இம்முறை தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் வைகோ உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''எல்லாத் தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். 12 சீட்டுகள் கிடைக்குமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தற்போது பதில் சொல்ல முடியாது. திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். 8 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிக்கையை எப்போது வெளியிடுவோம் என்று விரைவில் அறிவிக்கப்படும். அதன் பிறகு உடனடியாக முதல் நாளில் இருந்தே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவோம்'' என்று வைகோ தெரிவித்தார்.
தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் விவகாரத்தில் திமுக கறார் காட்டுவதாகக் கூறப்படுகிறதே என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, தாங்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் நினைப்பது நியாயமானது. அது அவர்களின் இயற்கையான உணர்வு. அதற்குக் கறார் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியது ஏன்? என்று வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT