Published : 02 Mar 2021 10:18 AM
Last Updated : 02 Mar 2021 10:18 AM
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று முதல் 6-ம் தேதி வரை விருப்ப மனு அளித்த வேட்பாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அதன்படி இன்று முதல் நேர்காணல் தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்.6 அன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. மார்ச் 12 முதல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகின்றது.
தேர்தல் அறிவிப்பை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன. இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மமக, முஸ்லிம் லீக் கட்சிக்கு மொத்தம் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மதிமுக, விசிகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸுடனும் ஒருசுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகள், சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இந்நிலையில் திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தத் தொடங்கியுள்ளது. வேட்பாளர் செல்வாக்கு, செலவழிக்கும் தகுதி, மாவட்ட வாரியாக கட்சியின் வெற்றி வாய்ப்பு, கூட்டணிக் கட்சிகள் நிலவரம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இதில் அலசப்படும்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏற்கெனவே அறிவித்தபடி இன்று முதல் நேர்காணல் தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நேர்காணலை நடத்துவர்.
நேர்காணல் நடைமுறை குறித்து திமுக வெளியிட்ட அறிவிப்பு:
''குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்/ பொறுப்பாளர்கள் மட்டும் வரவேண்டும். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை.
வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக் கூடாது. அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. நேர்காணலின்போது சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் அல்லது பொறுப்பாளர் மட்டுமே வேட்பாளருடன் அமர வைக்கப்பட்டு நேர்காணல் செய்யப்படுவார்.
நேர்காணலில் மார்ச் 2, செவ்வாய் (இன்று) காலை 8 மணி- கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு ராமநாதபுரம்
மார்ச் 2, மாலை 4 மணி- விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு நடக்க உள்ளது.
மற்ற நாட்களில் நடக்கும் நேர்காணல் விவரம்:
மார்ச் 3, புதன் காலை 9 மணி- மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு.
மார்ச் 3, மாலை 4 மணி- திருப்பூர் மத்திய, வடக்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு.
மார்ச் 4, வியாழன் காலை 9 மணி - தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு.
மார்ச் 4, மாலை 4 மணி - கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு.
மார்ச் 5, வெள்ளி காலை 9 மணி - தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு, மத்தியம்.
மார்ச் 5, மாலை 4 மணி - திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு.
மார்ச் 6, சனி காலை 9 மணி - திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு.
மார்ச் 6, சனி மாலை 4 மணி - புதுச்சேரி, காரைக்கால்''.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT