Published : 02 Mar 2021 09:02 AM
Last Updated : 02 Mar 2021 09:02 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளதற்கு அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு இழுபறியே பெரும் சான்றாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு கடந்த இரு நாட்களாக இச்சர்ச்சை நீடிக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு அதிமுக, பாமகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இருகட்சிகளும் சுமுகமாக இந்த முடிவை எடுத்துக்கொண்டன. பாஜக இன்று மீண்டும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்குமாறூ கோரிக்கை விடுத்தும் தேமுதிகவுக்கு அழைப்புவரவில்லை. இந்நிலையில், தேமுதிக, அதிமுக கூட்டணியில் நீடிக்குமா இல்லை தனித்துப் போட்டியிடுமா என்ற சூழல் உருவாகியது. இந்தச் சூழலில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி சந்தித்துப் பேசினர். அப்போது தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 12 தொகுதிகள் வரை ஒதுக்க கட்சி தயாராக இருப்பது குறித்து விஜயகாந்திடம் விவரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், பாமகவுக்கு அளித்த அதே 23 தொகுதிகளிலேயே தேமுதிக கெடுபிடி காட்டுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்வதுபோலவே தேமுதி பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரின் பேச்சும், எல்.கே.சுதீஷின் பேஸ்புக் பதிவும் உள்ளன.
தேமுதிக 23 தொகுதிகள் கிடைக்காவிட்டால் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் தயாராகும் என்ற தொனியில் பேசியுள்ள விஜயபிரபாகர், "தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் தகுதி நமது கட்சிக்கு உண்டு.அமையவுள்ள புதிய சட்டப்பேரவையில் தலைவரின் குரல் நிச்சயம் ஒலிக்கும். தலையே போனாலும் தேமுதிக தலைகுனிந்து போகாது" என்று பேசியுள்ளார்.
அண்மையில், கள்ளக்குறிச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, தேமுதிகவின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்படி தலைமைக் கழகம் ஒருபோதும் முடிவு எடுக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதேபோல், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பதிவில் நமது முதல்வர் விஜயகாந்த் எனப் பதிவு செய்துள்ளதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இத்தகைய சூழலில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அதிமுக தரப்பில் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொலைபேசியில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கான நேரத்தை தேமுதிகவே முடிவு செய்யலாம் என்றும் கே.பி.முனுசாமி தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படுகிறதா? இல்லை தேமுதிக கூட்டணியிலிருந்து விடுபடுகிறதா என்பது இன்றைக்கே உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...