Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த ஒரு மாதமாக மஞ்சள் விலை அதிகரித்து வரும் நிலையில், புது மஞ்சள் விலை அதிகபட்சமாக நேற்று குவிண்டால் ரூ.9856-க்கு விற்பனையானது.
ஈரோட்டில் நான்கு இடங்களில் நடக்கும் மஞ்சள் சந்தையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக நுகர்வு அதிகரிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் கடந்த மாதம் முதல் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உள்ளூர் தேவை அதிகரிப்புடன், கிருமிநாசினியாக விளங்கும் மஞ்சளின் ஏற்றுமதியும் சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருப்பில் வைத்திருந்த மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பழைய மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6000 முதல் ரூ.8000 வரை விலை கிடைத்து வருகிறது. புது மஞ்சளுக்கான விலை தொடர்ந்து அதிகரித்து குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கோபி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று மஞ்சள் வரத்து இல்லாததால், ஏலம் நடைபெறவில்லை. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 12 மூட்டைகள் வரத்து இருந்த நிலையில், விற்பனை நடைபெறவில்லை. அதே நேரத்தில் ஈரோடு மஞ்சள் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 249 மூட்டை மஞ்சளும் விற்பனையானது. இங்கு பழைய மஞ்சள் (விரலி) குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.7569-க்கும், அதிகபட்சமாக ரூ.8911-க்கும் விற்பனையானது. புது மஞ்சள் குறைந்தபட்சம் ரூ.8329-க்கும், அதிகபட்சமாக ரூ.9856-க்கும் விற்பனையானது. கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6820-க்கும் அதிகபட்சமாக ரூ.7979-க்கும், புதிய மஞ்சள் குறைந்தபட்சம் ரூ.8449-க்கும், அதிக பட்சமாக ரூ.8669-க்கும் விற்பனையானது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 2917 மூட்டை மஞ்சள் வரத்து இருந்த நிலையில், 1223 மூட்டை மஞ்சள் விற்பனையானது. பழைய விரலி மஞ்சள் ரூ.6599 முதல் ரூ.8791 வரையிலும், புது மஞ்சள் ரூ.7569 முதல் ரூ.9229 வரையிலும் விற்பனையானது.
பழைய கிழங்கு மஞ்சள் ரூ.6508 முதல் ரூ.8269 வரையிலும், புதிய மஞ்சள் ரூ.7359 முதல் ரூ.8295 வரையிலும் விற்பனையானது. மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT