Published : 01 Mar 2021 10:22 PM
Last Updated : 01 Mar 2021 10:22 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் ஐயூஎம்எல்-க்கு- 3; மமக-வுக்கு- 2 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழகத்தில் 3 (மூன்று) தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.எ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எல்.எ., பொருளாளர் எம்.எஸ்.எ.சாஜஹான், மாநில முதன்மைத் துணைத் தலைவர் எம்.அப்துல்ரகுமான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி, எம்.பி., மாநிலச் செயலாளர் ஹெச்.அப்துல்பாசித் - கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி 3 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

அதேபோல், மமகவுடனான தொகுதி உடன்பாடு குறித்த அறிக்கையில், "நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மனித நேய மக்கள் கட்சி, தமிழகத்தில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, உயர்நிலைக்குழு உறுப்பினர் என்.ஷபியுல்லாகான் - கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் மனித நேய கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், திமுக தலைமை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x