Published : 01 Mar 2021 09:05 PM
Last Updated : 01 Mar 2021 09:05 PM
மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியினர், அவர்களது கிராமங்கள், நகரங்களில் ஒரு போஸ்டருக்கு ஒரு நிர்வாகி பெயர், அவர் வசிக்கும் ஊர் பெயர்களைப் போட்டு, ‘வரும் தேர்தலில் ஏன் சரத்குமார் முதல்வராகக் கூடாது?, ’ என்று போஸ்டர் ஒட்டி விநோத பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்த முறை ஒன்றுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடுவோம் என்று கூறிய சமக தலைவர் சரத்குமார் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலாவை போய் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கு, “நன்றி மறப்பது நன்றன்று.. என்ற அடிப்படையில் சசிகலாவை சந்திக்க வந்தேன்; உடல்நலம் பற்றி விசாரித்தேன்” என்றார். அவரை சந்தித்த சில நாட்களில் அவர் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளார். மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலை சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக சரத்குமார், தனது மனைவி ராதிகாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, அவர்களுடன் ஆலோசனை நடத்துவது என்று சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தயராகி வருகிறார்.
இந்த முறை சரத்குமார் மனைவி ராதிகா, தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்காக, அவர் நடித்த ‘சித்தி’ சீரியல் நாடகத்தில் தன்னை விடுவித்துக் கொண்டார்.
இந்நிலையில் சமகவினர் மதுரையில் அவர்கள் வசிக்கும் கிராமங்கள், நகரங்களில் அவர்கள் வசிக்கும் ஊர் மற்றும் தத்தம் பெயரைப் போட்டு, ‘வரும் தேர்தலில் ஏன் சரத்குமார் முதல்வராகக் கூடாது?, ’ என்று போஸ்டர் ஒட்டி விநோத பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
மதுரையில் கிராமங்கள் தோறும் கட்சி உறுப்பினர்கள், அவர்கள் கிராமங்கள் பெயரைப் போட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை, அந்த வழியாக செல்வோர் வேடிக்கைபார்த்துச் சென்றனர்.
முதற்கட்டமாக இந்த போஸ்டர் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கியுள்ள சமகவினர், அடுத்து தமிழகம் முழுவதும் இந்த பிரச்சார உத்தியை மேற்கொள்ளவுள்ளனர்.
போஸ்டரில் ‘ஏன் சரத்குமார் முதல்வராகக் கூடாது, ’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதால் நடிகர் சரத்குமார், இந்த முறை தனித்து களம் இறங்கப்போகிறாரா? அல்லது அவரது தலைமையில் தனி அணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிடபோகிறாரா என்ற கேள்வி எழுந்தநிலையில் அவர் ஏற்கெனவே முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை சந்தித்துள்ளார்.
அதனால், சரத்குமாரின் இந்த முதல்வர் போஸ்டர் பிரச்சாரம், மற்ற கூட்டணிகளில் கூடுதல் இடங்களை பெறுவதற்கான உத்தியா? என்பதும் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT