Published : 01 Mar 2021 07:29 PM
Last Updated : 01 Mar 2021 07:29 PM
ஜெயலலிதா உத்தியைக் கையாண்டு அதிமுகவைக் கைப்பற்ற டிடிவி.தினகரனும், சசிகலாவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1987-ம் ஆண்டு எம்ஜிஆர்., மறைவுக்குப் பின், அவர் தொடங்கிய அதிமுக, ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிளவுபட்டது.
தேர்தல் கமிஷனால் 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்ட நிலையில் 1989-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக., அணி 'சேவல்' சின்னத்திலும், ஜானகி தலைமையிலான அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டன.
எம்ஜிஆரின் மனைவி என்பதால் ஜானகி மீதும், எம்ஜிஆருடன் அதிக படங்களுடன் கதாநாயகியாக நடித்ததோடு அவருடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டதால் ஜெயலலிதா மீதும் அந்தத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அப்போது அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் ஜானகி அணி பக்கமே நின்றது குறிப்பிடத்தக்கது. அதிமுக இரு அணியாக பிரிந்து போட்டியிட்டதால் அந்தத் தேர்தலில் திமுகவே வெற்றிப்பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், ஜெ., அணி, ஜா அணிகளுக்கு இடையே யார் அதிக இடங்களில் வெற்றிப்பெறுகிறார்களோ, அவர்கள் அதிமுகவை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்தச்சூழலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்தது.
ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றதோடு அதிமுகவையும் கைப்பற்றினார். இப்படி, ஜெயலலிதா ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலாளராகி அரசியல் களத்தில் வெற்றிபெற்ற வரலாறு அதிமுகவுக்கு உண்டு.
அதுபோன்ற உத்தியைக் கையாண்டு அதிமுகவைக் கைப்பற்ற டிடிவி.தினகரனும், சசிகலாவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கட்டுப்பாட்டில் அதிமுக வந்தாலும், அவர்கள் வெற்றியைத் தாண்டி தங்கள் செல்வாக்கை இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதனால், அவர்களுக்குப் சவால்விடுக்கும் வகையில் டிடிவி.தினகரன், தமிழகத்தில் தங்களுக்கு செல்வாக்கான குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து அதில் வெற்றிபெற மும்முரமாக தேர்தல் பணியாற்றத் தொடங்கிவிட்டனர்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கட்சியும், பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் கே.பழனிசாமி பக்கம் உள்ளனர்.
அதிமுக மீ்ண்டும் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்தாலோ, கவுரவமான தொகுதிகளை பெற்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தாலோ ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு எந்த சிக்கலும் ஏற்படப் போவதில்லை.
ஆனால், அதிமுக எதிர்பாராத மிகப்பெரிய சரிவை சந்தித்தால் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நெருக்கடியான நேரத்தில் அதிமுகவை விட அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளையோ, அதிமுகவுக்கு இணையான அல்லது அதை விட கூடுதல் சில தொகுதிகளையோ, வாக்குவங்கியையோ பெற்றாலோ ஜெயலலிதா பாணியில் அதிமுகவை கைப்பற்றலாம் என சசிகலா-டிடிவி.தினகரன் தரப்பு திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் கே.பழனிசாமிக்கு போட்டியாக கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அமமுக பொதுக்குழுவில் டிடிவி.தினகரன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமமுக, அதன் பொதுக்குழுவில் திமுகவை தோல்வியடைய செய்வதே முதல் நோக்கம் என வெளிப்படையாகக் கூறி வந்தாலும், அக்கட்சியினரின் முழு நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவதிலேயே உள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே அதிமுக அணியை பலவீனப்படுத்தும் வகையில் அக்கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவை சந்தித்தப்பிறகு சரத்குமார் அதிமுக அணியை விட்டு வெளியேறிய நிலையில், அடுத்தகட்டமாக தேமுதிமுக உள்ளிட்ட சில கட்சிகளையும் அமமுக தங்கள் பக்கம் வராவிட்டாலும் கூட அவர்களை மாற்று அணிகளுக்கு திருப்பி விடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT