

திருட்டுப் போன தனது செல்லப் பிராணிக்காக ஒவ்வொரு நாளும் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் தன்னார்வலர் ஒருவர்.
செல்லப் பிராணிகளை உடன் பிறந்தவர்கள் போல, பெற்ற பிள்ளைகளைப் போல கவனித்துக் கொள்பவர்கள் பலரைக் காண முடியும். சமூக ஊடகங்களில் செல்லப் பிராணிகள் விரும்பி என்பதைத் தங்களது சுயவிவரப் பக்கத்தில் போட்டிருப்பவர்களும் ஏராளம்.
நன்றாகப் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு, குறிப்பாக நாய்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. இதனால் நாய்கள் திருட்டுப் போகும் சம்பவங்களும் நம் சமூகத்தில் புதிதல்ல. அப்படி சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் அருகே, யான் உடான் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் வேதிகா என்பவரின், ஆஸ்டர் என்று பெயரிடப்பட்ட 10 வயது பீகிள் இன செல்ல நாய் கடந்த 25-ம் தேதி திருடப்பட்டது.
இந்த நாயை, அந்தப் பகுதியிலிருந்து திருடிச் சென்ற மர்ம நபரின் முகம் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ள உரிமையாளர், நாயின் புகைப்படம் அச்சிட்ட தமிழ் மற்றும் ஆங்கில அறிவிப்பையும் நூற்றுக்கணக்கானவர்களிடம் கொடுத்துத் தேடி வருகிறார்.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் அறிவிப்பு
நாய் காணாமல் போனவுடன் உரிமையாளரும், அவரது 4 நண்பர்களும் நுங்கம்பாக்கம் முழுக்க 13 மணி நேரம் தொடர்ந்து தேடியுள்ளனர். இன்று வரை ஒவ்வொரு நாளும் 15க்கும் மேற்பட்டவர்கள் வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வடபழனி, கோயம்பேடு எனப் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சமூக ஊடகத்திலும் இதுகுறித்து வேதிகா பகிர்ந்துள்ளார். நாயைத் தேடித் தருபவர்களுக்கு ரூ.8000 வெகுமதியும் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.