Published : 01 Mar 2021 06:43 PM
Last Updated : 01 Mar 2021 06:43 PM
சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் இருசக்கர வாகனம் மோதி சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் பலியானார். அவரை மோதியவர் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றார். இது விபத்தா? அல்லது முன்பகையால் நடந்த கொலையா என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை, அண்ணாசாலை பார்டர் தோட்டம் தாஸ் சாலையில் வசித்தவர் பாஸ்கர் @ கருத்து பாஸ்கர் (24). இவர் மீது அண்ணா சாலை, திருவல்லிக்கேணி ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் இவர் மீது அண்ணா சாலை காவல் நிலையத்தில் உள்ளதால் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இவர் இருந்தார்.
இந்நிலையில் ரவுடி பாஸ்கர் நேற்று இரவு தனது கூட்டாளி மனோஜ் என்பவருடன் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று ரவுடி பாஸ்கர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடன் வந்த நண்பர் பாஸ்கரைக் காப்பாற்ற ஓடினார். இதற்குள் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதில் காயமடைந்த பாஸ்கரை அவரது கூட்டாளி மனோஜ் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார், ரவுடி பாஸ்கர் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை சவக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர், பாஸ்கருக்கு நடந்தது உண்மையில் விபத்தா? அல்லது அவர் ரவுடியாக இருந்தபோது, அவரால் பாதிக்கப்பட்ட நபர்களில் யாராவது திட்டமிட்டுப் பழி வாங்குவதற்காக விபத்து போல் சித்தரித்துச் கொலை செய்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT