Published : 01 Mar 2021 06:49 PM
Last Updated : 01 Mar 2021 06:49 PM

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு: கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

பெரியார் சிலை அவமதிப்பு.

சென்னை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்றிரவு (பிப்.28) பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்:

தேர்தல் நெருங்கும் நேரத்தில்கூட இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை எளிதில் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இதன் விளைவை வட்டியும் முதலுமாகக் காவி கட்சிக்கும், அதற்குத் துணைபோகும் கூட்டணிகளுக்கும் தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

காவல்துறை அதிகாரிகள் வழக்கம் போல் திசை திருப்பி, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றச் செய்தால் மக்களின் கடும் எதிர்ப்பு வெடிப்பது உறுதி. பாஜக - ஆர்எஸ்எஸ்ஸைக் காப்பாற்றுவதா காவல்துறையின் கடமை?

வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி உலா வந்தவர் பெரியார். அவர் மறைந்து 47 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அவர் சிலையைக் கண்டே நடுநடுங்கும் நிலைதான் மதவாத, சாதியவாத காவிக் கூட்டத்துக்கு உள்ளது.

வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக:

பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் உருவச்சிலைகள் மட்டுமல்ல, திருவள்ளுவர் சிலைகளும்கூட இந்த ஆட்சியில் அவமரியாதை செய்யப்படுவது என்பது வாடிக்கையாகி விட்டது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலும்கூட இத்தகைய கேவலமான செயல்கள் அரங்கேறுகின்றன என்றால், தமிழகக் காவல்துறை பொறுப்பின்றி மெத்தனமாகக் கிடக்கிறது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.

மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக நம் சமுதாயம் அமைவதற்கு வாழ்நாள் முழுக்க கண் துஞ்சாமல் போராடியவர் பெரியார். எதிர்ப்புகள் சூழ்ந்தபோதெல்லாம் அதனை முறியடித்து, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஆதிக்க சக்திகளிடமிருந்து தாய்ப் பறவையாக பாதுகாத்திட்டவர் பெரியார்.

அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் நெருங்குகிற இந்த வேளையிலும் அவருடைய உருவச் சிலை குறி வைத்து தாக்கப்படுவதும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படாததும் இந்த ஆட்சியில் தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. இந்த அக்கிரமச் செயலை மதிமுக சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

இந்தப் பிரச்சினையிலாவது குற்றவாளிகளைக் கைது செய்து, கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும்.

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசுவது, காவி ஆடை அணிவிப்பது போன்ற செய்கைகள் மூலம் தமிழ்நாட்டை காவிக் கூடமாக மாற்ற முடியாது. பெரியார் வழி, அண்ணா வழி, ஜெயலலிதா வழி வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இத்தகைய இழிவான சம்பவங்கள் நடப்பது அவமானகரமாகும்.

இத்தகைய சமூக விரோத கும்பலைக் கண்டு அரசு, அஞ்சி நடுங்குவது வியப்பளிக்கின்றது.

தாங்கள் உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கக் காரணமாக விளங்கும் பெரியாரை அவமானப்படுத்தும் செயல் கண்டு அரசு தொடர்ந்து மௌனம் சாதித்தால், சமூக விரோதிகளுக்கு எதிராகப் பொதுமக்களே சட்டத்தைக் கையில் எடுக்கும் நிலை ஏற்படும்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி:

பெரியார் இந்த மண்ணை விட்டு மறைந்து ஐம்பது ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இந்த 21-ம் நூற்றாண்டிலும் பெரியாரின் சமூக நீதிக் கோட்பாடுகள் தமிழ் மண்ணிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் அடித்து நொறுக்கப்பட்டு வருவதும், பெரியாரின் ஜீவநாதக் கொள்கையான சமூக நீதி இம்மண்ணில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக காப்பாற்றப்பட்டு வருவதும் இந்தத் தமிழ் மண்ணை அபகரித்து, ஆளத் துடிக்கும் சங்பரிவார் சனாதன கும்பலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலேயே இதுபோன்ற செயல்களைத் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, திராவிட இயக்கத் தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழினமும் வெகுண்டெழுந்து போராடுவதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x