Published : 01 Mar 2021 05:37 PM
Last Updated : 01 Mar 2021 05:37 PM

டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு; எங்கள் கண்காணிப்பில் தொடர்ந்து நடக்கும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிக்கிய டிஜிபி மீதான புகாரில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா? இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் அடிக்கடி கண்காணிக்கும். சிபிசிஐடி அடிக்கடி விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை வராத நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதியிடம் அந்தப் பெண் எஸ்.பி. புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில், டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணை அதிகாரியாக எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதற்கு முன், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தைத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை இன்று பிற்பகல் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், “டிஜிபி மீது புகார் வந்தவுடன் வழக்குப் பதிவதில் தாமதம் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக உடனடியாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26-ல் புகார் வந்தவுடன் வழக்கு சிபிசிஐடிக்கு அனுப்பப்பட்டு பிப்ரவரி 27-ம் தேதியே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் எஸ்.பி. முத்தரசி தலைமையில் விசாரணை மாற்றப்பட்டது” என விளக்கம் அளித்தார்.

பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில்,

“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும். விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார் என்றால், சாதாரணப் பெண் காவலர்கள் நிலை என்ன? இந்த விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஊடகங்கள் இதை விவாதப் பொருளாக்க வேண்டாம்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுத்த விவகாரத்தை வைத்து அரசியல் கட்சிகள், அரசியல் செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை யாரும் பயன்படுத்தவோ வெளியிடவோ கூடாது” என உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வுக்குப் பரிந்துரை செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x