விலை உயர்வு குறித்து சிறிதும் கவலைப்படாத இரக்கமற்ற மத்திய அரசு: முத்தரசன் கண்டனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சிறிதும் கவலைப்படாத இரக்கமற்ற அரசாக மத்திய அரசு விளங்குகிறது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கை:

"அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சமையல் எரிவாயு விலையைக் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை உயர்த்தி, அதன் காயம் ஆறாத நிலையில், இன்று மார்ச் முதல் நாள் நான்காம் முறையாக மேலும் ரூ.25 விலையை உயர்த்தி, சிலிண்டர் விலை ரூ.835 ஆக உயர்ந்துள்ளது.

இவ்விலை உயர்வு யாரையும் பாதிக்காது என்று பாஜக தலைவர்கள் கூறுவது வியப்பாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து, அதன் விளைவாக அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து வருகின்றன.

விலை உயர்வு குறித்து, சிறிதும் கவலைப்படாத இரக்கமற்ற அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவதையும் இவை குறித்துக் கவலைப்படாமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமியின் அரசையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடன் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in