Published : 26 Nov 2015 09:16 AM
Last Updated : 26 Nov 2015 09:16 AM

பருவம் தவறும் சம்பா நெற்பயிர்கள்: அச்சத்தில் விவசாயிகள் - காவிரி டெல்டா பகுதிகளில் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி பருவம் தவறி வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் பிரதானம். கரும்பு, பருத்தி உள்ளிட்ட சில பயிர்கள் சொற்ப அளவில்தான் பயிரிடப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடி 1.15 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி சாகுபடி 4.20 லட்சம் ஹெக்டேரிலும் நடைபெறுவது வழக்கம். மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டு, இரு பருவங்களுக்கும் முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதன் காரணமாக குறுவை சாகுபடி பரப்பளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

சம்பா மற்றும் தாளடி சாகுபடியைப் பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதத்தில் நாற்றுகளை விட்டு, செப்டம்பர் இறுதிக்குள் நடவுப் பணிகளை முடித்துவிட வேண்டும். அப்போதுதான் அக்டோபர் இறுதியில் தொடங்கும் பருவமழையால் பயிர்கள் பாதிக்காது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவத்தில் இந்த ஆண்டில் 4.16 லட்சம் ஹெக்டேரில் சாகுபடிக் குத் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது ஏறத்தாழ 10 ஆயிரம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிவடையாமல் உள்ளன.

பாசனத்துக்குத் தாமதமாக தண்ணீர் திறப்பது, ஆறுகள், வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாததால் கடைமடை வரை நீர் சென்று சேராதது, பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல், தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாகுபடி பருவங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன.

இதுகுறித்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பாசன காலத்தில் சாகுபடி பணி களுக்கு முன்னுரிமை அளித்து அணையிலிருந்து தண்ணீர் திறப்ப தில்லை. மேலும், திறக்கப்படும் தண்ணீரும் அனைத்து வயல் களுக்கும் சென்று சேருவதில்லை.

டெல்டா பகுதியிலேயே பருவ மழையை வைத்துதான் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது கவலைக்குரியது. பருவம் தவறு வதால் களையெடுப்பது, உரமிடு வது உள்ளிட்ட பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையால், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பருவம் தவறி தாமதமாக நடவு செய்யப்படுவதால், இளம் பயிர் கள் வேர்விட்டு, வளரும் முன்பாகவே தண்ணீரில் மூழ்குவ தால், அதன் வளர்ச்சி பாதிக்கப்படு வதுடன், பயிர்கள் எண்ணிக்கை குறைவு, நோய்த் தாக்குதல், பயிர்களை மீண்டும் வளர்த்தெடுக்க ஆகும் கூடுதல் உரச் செலவு, மகசூல் குறைவு உள்ளிட்டவைகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.

ஏற்கெனவே சாகுபடி செலவு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்பும் கூடவே சேர்ந்துகொள்வ தால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். வரும் ஆண்டு களில் அந்தந்த பருவத்தில் சாகுபடி பணிகளை மேற்கொள் ளும் வகையில் அதற்கான திட்டமிடுதல்களை விவசாயிக ளுடன் கலந்தாலோசித்து அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x