Published : 01 Mar 2021 02:59 PM
Last Updated : 01 Mar 2021 02:59 PM
பாஜக-அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி இன்று ஆன்மிக பயணம் புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி புதுவையிலும் தொடர்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது, அதிமுக, பாஜகவோடு இணைந்து நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களை சந்தித்தது. இதனால், இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, புதுவைக்கு வந்த பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரையும் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். தற்போது, காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ள சூழலில், அக்கூட்டணியிலிருந்து விலகிய பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர். புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் முடிவில் பாஜக உள்ளது. பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜக முன்னிலைப்படுத்துகிறது.
இருப்பினும், புதுச்சேரி சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக என்.ஆர்.காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸிலிருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர் ரங்கசாமி. அதனால் பாஜக கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்க விரும்புகிறது. இதனால், பாஜக கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, பெரும்பான்மைக்குத் தேவையான கணிசமான தொகுதியில் போட்டியிடவும் என்.ஆர்.காங்கிரஸ் விரும்புகிறது. இதனால், இக்கூட்டணியில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், பாஜக தலைமையும் ரங்கசாமியிடம் கூட்டணி பற்றி பேசியும் இறுதி முடிவை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ரங்கசாமி புதுச்சேரியிலிருந்து இன்று (மார்ச் 1) காலை ஆன்மிக பயணத்துக்குப் புறப்பட்டார்.
இது தொடர்பாக, ரங்கசாமி தரப்பில் விசாரித்தபோது, "கூட்டணி பற்றி முடிவு எடுப்பதற்காக ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கோயில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இன்று காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பின்னர், அங்கிருந்து பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்கு சாமியார் ஜீவசமாதிக்கும், அங்கிருந்து பழனி முருகன் கோயில், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு புதுவைக்குத் திரும்புகிறார். அதன்பிறகுதான் கூட்டணி பற்றி அறிவிப்பார்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT