Published : 01 Mar 2021 02:37 PM
Last Updated : 01 Mar 2021 02:37 PM
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி திமுக, அதிமுக, தமிழக அரசு, திராவிடர் கழகம், மதிமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குநர், மத்திய சுகாதாரத்துறை, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் செயலாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து, மத்திய அரசு மூன்று மாதங்களில் (27.10.2020) அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என கூறி எம்.பி-யும், திமுக செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அமைத்த குழுவில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோரை சேர்க்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் அளிக்காததால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மத்திய, மாநில சுகாதார துறை செயலாளர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT