Published : 01 Mar 2021 02:04 PM
Last Updated : 01 Mar 2021 02:04 PM
ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமைக்குத் தக்க சின்னமாகத் திகழும் ஆய்வு நிறுவனம் மூடப்படும் நிலையில் அது தொடர்ந்து செயல்பட்டிட ஏதுவாக 2019-ஆம் ஆண்டு அறிவித்தபடி 1.24 கோடி ரூபாயை தமிழக அரசு அனுப்பிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மார்ச் 31-ல் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உறுதி அளித்தவாறு நிதி வழங்கப்படாததால் இச்சிக்கல் நிலவுகிறது என்று 'இந்து தமிழ் திசை'யில் இன்று செய்தி வெளியானது.
செய்திக்கான இணைப்பு: ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மார்ச் 31-ல் மூட முடிவு: தமிழக அரசு உறுதி அளித்தவாறு நிதி வழங்கப்படாததால் சிக்கல்?
இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள “இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம்” மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மிகத் தொன்மை வாய்ந்த செம்மொழித் தமிழ்மொழியினைக் கற்று, அதன்மீது மிகுந்த ஆர்வம் கொண்டு ஜெர்மனியின் தமிழ் அறிஞரான பேராசிரியர் டாக்டர் க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் என்பவரால் அப்பல்கலைக்கழகத்தில் 1963-ல் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆய்வு நிறுவனம்.
இங்கு, முனைவர் பட்டத்திற்கு 5 படிப்புகள் உள்பட, தமிழில் இளங்கலை படிப்பும் இருக்கிறது. ஆய்வு நிறுவன நூலகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் இருப்பது தனிச்சிறப்பு.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் மூடப்படுகிறது என்று முன்பு வெளிவந்த செய்தியை அடுத்து தமிழக அரசின் சார்பில் 1.24 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று 2019-ல் கூறப்பட்டு - கரோனாவால் அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்று செய்தி வெளிவந்துள்ளது. அதிமுக அரசின் அலட்சியத்தால், மார்ச் 31ஆம் தேதியுடன் மீண்டும் அந்த ஆய்வு நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக அரசு, இப்போதாவது இந்த 1.24 கோடி ரூபாயை கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமைக்குத் தக்க சின்னமாக உள்ள இந்த ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டிட ஏதுவாக - கொலோன் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக 1.24 கோடி ரூபாய் நிதி சென்றடைவதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT