Published : 01 Mar 2021 11:57 AM
Last Updated : 01 Mar 2021 11:57 AM

தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை; மார்ச் 7 அன்று திருச்சியில் வெளியிடுகிறார் ஸ்டாலின்

பிரச்சார நிகழ்ச்சியில் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை மார்ச் 7 அன்று திருச்சியில் வெளியிட உள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. அதற்கான பிரச்சாரத்தைக் கடந்த சில மாதங்களாக, திமுக சார்பாக நானும், முன்னணித் தலைவர்களும், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நேற்றிலிருந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறோம். இன்னொரு பக்கம், தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வரும் 7-ம் தேதி திருச்சியில் மாநாடு போன்று சிறப்பான கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், மிக முக்கியமான லட்சியப் பிரகடனத்தை, தமிழகத்துக்கான தொலைநோக்குப் பார்வையை நான் வெளியிடவிருக்கிறேன். தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை வெளியிட இருக்கிறேன்.

அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலையைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் அந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம். அதனைச் செயல்படுத்திக் காட்டக்கூடிய பொறுப்பு என்னுடையது. பத்தாண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய இலக்கை வரையறுத்திருக்கிறேன்.

இதுவரை தமிழக மக்களுடன் நடத்தியிருக்கின்ற சந்திப்பின் அடிப்படையில், திமுக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கக்கூடிய கலந்துரையாடல்கள் அடிப்படையில் இந்தத் தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்துக்கான எனது தொலைநோக்குப் பார்வையினை அடுத்த 20 நாட்களுக்குள்ளாக 2 கோடி குடும்பங்களிடத்திலும் கொண்டுபோய்ச் சேர்ப்பது என முடிவு செய்திருக்கிறோம். அதனைத் திமுகவினர் வார்டு, ஒன்றியம், கிளை என அனைத்து மட்டங்களிலும் மக்களிடத்தில் சேர்ப்பார்கள். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்படும்.

இந்த ஆட்சியை அகற்ற உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பணியாற்றுவதிலிருந்து திமுக பின்வாங்கியது இல்லை. கரோனா காலத்தில் மக்களுக்கு எப்படித் துணை நின்றோமோ, அப்படி எந்த நிலையிலும் திமுக மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் பிறந்த நாள் செய்தி".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரச்சாரத்தின்போது திமுகவை விமர்சித்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "ஏற்கெனவே மோடி வந்து பேசினார். இப்போது அமித் ஷா பேசியுள்ளார். மத்தியில் பாஜகவில் இருப்பவர்கள் அத்தனை பேரும் அதைத்தான் பேச உள்ளனர். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஊழலிலேயே இருக்கக்கூடிய ஓபிஎஸ்-ஈபிஎஸ் கரங்களைத்தான் இரு கைகளிலும் உயர்த்திக் காட்டினார் மோடி. அதிலிருந்து ஊழலுக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்" என்றார்.

தமிழக அரசின் கடன் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x